ரஷ்யாவில் சிக்கித் தவித்த பயணிகள் ஏர் இந்தியா விமானத்தில் அமெரிக்கா சென்றனர்
ரஷ்யாவில் சிக்கித் தவித்த பயணிகளையும் பணியாளர்களையும் ஏற்றிக்கொண்டு ஏர் இந்தியாவின் மாற்று விமானம் இன்று(ஜூன் 8) ரஷ்யாவின் மகதானில் இருந்து சான் பிரான்சிஸ்கோவிற்கு புறப்பட்டது. ஏர் இந்தியா பணியாளர்கள், சான் ஃபிரான்சிஸ்கோ சர்வதேச விமான நிலையத்தில்(SFO) பயணிகளுக்கு உதவுவதற்காக தயார்நிலையில் உள்ளனர். பயணிகள் சான் ஃபிரான்சிஸ்கோவை அடைந்தவுடன் அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள், போக்குவரத்து உதவிகள் உட்பட அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று ஏர் இந்தியா அறிவித்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை(ஜூன் 6) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக புது டெல்லியில் இருந்து சான்பிரான்சிஸ்கோவிற்கு சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் அவசரமாக ரஷ்யாவில் தரையிறக்கப்பட்டது.
மொழி பிரச்சனை, உணவு பிரச்சனை: கண்ணை கட்டி காட்டில் விடப்பட்ட பயணிகள்
ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் இருந்து 10,000 கிமீ தொலைவில் உள்ள மகதானில் சிக்கித் தவித்த ஏர் இந்தியா பயணிகள் நேற்று முழுவதும் ஒரு பள்ளியில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அங்கு மொழி பிரச்சனை, உணவு பிரச்சனை போன்ற பல பிரச்சனைகளை அவர்கள் எதிர்கொண்டனர். அந்த பகுதியில், கடல் உணவுகளும், இறைச்சிகளும் மட்டுமே அதிகம் இருந்ததால் பலர் ரொட்டிகளை தின்று நாளை கழித்தனர். பயணிகளின் உடமை விமான நிலையத்திலேயே வைக்கப்பட்டிருந்தது. இதனால், வயோதிகர்களால் தங்கள் மருந்துகளை எடுத்து கொள்ள முடியவில்லை. இந்நிலையில், பல சிரமங்களை அனுபவித்த அந்த பயணிகள் இன்று மாற்று விமானத்தில் சான்பிரான்சிஸ்கோவிற்கு புறப்பட்டனர்.