பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்து பெங்களூரில் பெரும் போராட்டம்
பெங்களூரு எம்ஜி ரோடு மெட்ரோ அருகே நேற்று மாலை நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு, பாலஸ்தீனத்தை ஆதரித்து போராட்டம் நடத்தினர். இஸ்ரேல் இராணுவத்திற்கும், பாலத்தீன போராளி குழுவான ஹமாஸுக்கு இடையே 10 நாட்களுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. இந்த போர் விவகாரத்தில், இந்திய அரசாங்கம் வெளிப்படையாக இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக நேற்று எம்ஜி ரோட்டில் நடத்தப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள், மனிதச் சங்கிலி அமைத்தும், மெழுகுவர்த்தி ஏந்தியும் பாலஸ்தீன மக்களுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர். ஆனால், பாலஸ்தீனியர்களுக்கு நடக்கும் கொடூரங்களை விவரிக்கும் கையேடுகள் அந்தத் போராட்டத்தின் போது விநியோகிக்கப்பட்டதால், அந்த போராட்டத்தில் ஈடுபட்ட பலரை போலீஸார் தற்காலிகமாக கைது செய்தனர்.
"இந்தியா எப்போதும் பாலஸ்தீனத்துக்கு துணையாக நிற்கிறது': PUCL
சுதந்திர பூங்காவை தவிர வேறு எந்த இடத்திலும் போராட்டம் நடத்த கூடாது என்ற உத்தரவை மீறியதால் அவர்கள் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சில போராட்டக்காரர்கள் உடனடியாக விடுவிக்கப்பட்டனர். இன்னும் சில போராட்டக்காரர்கள் கப்பன் பார்க் மற்றும் அசோக் நகர் காவல் நிலையங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர். ''டெல்லி, மும்பை, பெங்களூரு போன்ற நகரங்களில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக போராட்டம் நடத்துபவர்களை போலீஸார் கைது செய்வது துரதிர்ஷ்டவசமானது. இந்தியா எப்போதும் பாலஸ்தீனத்துக்கு துணையாக நிற்கிறது. அதிகாரத்தில் உள்ளவர்கள் என்ன செய்ய முயன்றாலும் பாலஸ்தீனியர்களுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவிக்கும் மக்களை ஒன்றிணைக்க முயற்சித்தோம். அங்கு இனப்படுகொலை முன்னெப்போதும் இல்லாத அளவை எட்டியுள்ளது," என்று PUCLஇன் பொதுச் செயலாளர் ஐஸ்வர்யா ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.