மே 1 முதல் ஷீரடி சாய்பாபா கோவில் காலவரையின்றி மூடப்படும்
இந்தியாவின் மகாராஷ்டிராவில் அமைந்துள்ள புகழ்பெற்ற புனித தலமான ஷீரடி சாய்பாபா கோவில் மே 1 முதல் காலவரையின்றி மூடப்படும். இந்த கோவிலின் பாதுகாப்பிற்காக மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையை(CISF) நியமிக்க இருப்பதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஷீரடி சாய்பாபா கோவிலின் அறக்கட்டளை, பணிநிறுத்த போராட்டம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது. மே 1 முதல் சாய்பாபா கோவில் நிர்வாகம் பணிநிறுத்த போராட்டம் செய்ய இருப்பதால், அன்று முதல் கோவில் காலவரையின்றி மூடப்படும்.பொதுவாக, மெட்ரோ நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களைப் பாதுகாக்கும் CISF படையால், கோவிலை பாதுகாக்க முடியாது என்று கோவில் நிர்வாகம் கூறியுள்ளது.
இந்த கோவிலுக்கு ஆண்டுதோறும் மில்லியன் கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்
தற்போது வரை, ஷீரடி கோவிலின் பாதுகாப்புப் பொறுப்பை மாநில காவல்துறை கையாண்டு வந்தது. மகாராஷ்டிரா மாநிலம் அகமதுநகரில் உள்ள ஒரு சிறிய நகரத்தில் அமைந்திருக்கும் இந்த கோவிலுக்கு ஆண்டுதோறும் மில்லியன் கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். சாதி, மத பேதமும் இன்றி அனைத்து பிரிவினரும் சாய்பாபாவின் முக்கிய தலமான இந்த கோவிலுக்கு விரும்பி செல்கின்றனர். இந்த கோவில் ஸ்ரீ சாய்பாபா சன்ஸ்தான் அறக்கட்டளை(SSST) மூலம் நிர்வகிக்கப்படுகிறது. கோவில் வளாகத்தின் பராமரிப்பை மேற்பார்வையிடுவது, இலவச உணவு வழங்குவது போன்ற அறப்பணிகளை இந்த நிர்வாகம் நிர்வகித்து வருகிறது. ஒரு மத வழிபாட்டுத்தலத்துக்கு ஏற்படும் தனித்துவமான பாதுகாப்பு சவால்களை கையாள CISF பயிற்சி பெறவில்லை என்று SSST கூறி இருக்கிறது.
இந்த காலவரிசையைப் பகிரவும்