அரசுப் பணிகளில் 4% இடஒதுக்கீட்டை நிறைவேற்ற கோரி மாற்றுத்திறனாளிகள் உள்ளிருப்புப் போராட்டம்
கடந்த ஒரு வாரமாக, பார்வையற்றோருக்கு அரசுப் பணிகளில் 1 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரி, சென்னையில் மாற்று திறனாளிகள் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். போக்குவரத்தை மறித்து நடத்தப்பட்ட இந்த போராட்டத்தை போலீசார் தலையீட்டு அப்புறப்படுத்தினர். சென்னையின் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சேத்துப்பட்டு பாலம் அருகே சாலையில் அமர்ந்து இவர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் சில மணிநேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது. கடந்த ஆண்டு, சிறப்புத் திறனாளிகளுக்கு அரசு வேலைகளில் 4 சதவீதம் கட்டாயம் என்று மாநில அரசு ஆணை பிறப்பித்தது. அதில், பார்வையற்றோருக்கு 1 சதவீத ஒதுக்கீடு வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஒரு வாரமாக இவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகள்
மாற்றுத்திறனாளிகள் 9 கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். பணவீக்கத்தை கருத்தில் கொண்டு வேலைவாய்ப்பின்மை நிவாரண நிதியை 1,000 ரூபாயில் இருந்து 5,000 ரூபாயாக உயர்த்த வேண்டும், மாதாந்திர உதவித்தொகையை 1,500 ரூபாயில் இருந்து 5,000 ரூபாயாகவும் உயர்த்த வேண்டும். தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பில் மாற்றுதிறனாளிகளுக்கு வழங்கப்படும் 4 சதவீத ஒதுக்கீட்டில், ஒரு சதவீதம் கண் பார்வை இல்லாத மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு வழங்க வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு நியமன விலக்கு அளித்தல், டி.என்.பி.எஸ்.சி தேர்வில் கண்பார்வை இல்லாத மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு தேர்வுகள் நடத்துதல் உட்பட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இரு தினங்களுக்கு முன்னர், அமைச்சர் கீதா ஜீவனுடன் இவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.