அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்கு சிறப்பு சிகிச்சை பிரிவு
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவிவரும் நிலையில், நடப்பாண்டில் 2 ,71,000 பேருக்கு கூடுதலாக டெங்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்ரமணியம் கூறியுள்ளார். மேலும் அவர், அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோருக்கு தனி சிகிச்சை பிரிவு அமைக்கப்பட்டுள்ளது என்றும், நிலவேம்பு மற்றும் பப்பாளி இலைகளின் சாறுகள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் விநியோகிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். தமிழகத்தில் கடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், சுகாதாரத்துறை பணியாளர்களுடன் உள்ளாட்சி பணியாளர்களும் இணைந்து டெங்கு குறித்த விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து, 16,005 கொசுக்களை அழிக்கும் புகை இயந்திரங்கள் மாநிலம் முழுவதும் பயன்படுத்தப்படுகிறது. 4,631 ஊழியர்கள் டெங்குவை பரப்பும் கொசுக்களை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் டெங்கு பரவல் குறித்து எடப்பாடி கே பழனிசாமி கருத்து
இதனிடையே, கோவை அரசு மருத்துவமனையில் 15 படுக்கைகளுடனான சிறப்பு சிகிச்சை பிரிவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது அதில் 4 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்றும், அவர்கள் அனைவருமே நலமாக தான் உள்ளார்கள் என்றும் கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா கூறியுள்ளார். இதற்கிடையே, தமிழக சுகாதாரத்துறை அமைச்சரின் மெத்தன போக்கு மற்றும் துறை சார்ந்த புரிதல் இல்லாத காரணத்தினால் பொதுமக்கள் அதிலும் குறிப்பாக குழந்தைகள் டெங்கு காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் உயிரிழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.