தமிழ்நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்
அடுத்த வாரம் முதல் கிறிஸ்துமஸ் விடுமுறை துவங்குவதால், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வார இறுதியும் சேர்த்து தொடர் விடுமுறையை முன்னிட்டு, டிசம்பர் 20, 21 மற்றும் 22 ஆம் தேதிகளில் சென்னையிலிருந்து மற்றும் சொந்த ஊருக்கும், தமிழ்நாட்டின் பல இடங்களிலும் பலர் பயணிக்க விரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் அடிப்படையில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் சேர்ந்து கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு 325 பேருந்துகள் (டிசம்பர் 20), 280 பேருந்துகள் (டிசம்பர் 21) இயக்கப்பட உள்ளன. மேலும், கோயம்பேட்டிலிருந்து ஓசூர், பெங்களூரு போன்ற இடங்களுக்கு 81 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
Twitter Post
சென்னைக்கு திரும்பவும் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு
கிளம்பாக்கம், கோயம்பேடு தவிர மாதவரத்திலிருந்தும் 20 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. அதேபோல வார இறுதி நாளன்று ஞாயிற்றுக்கிழமை, சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்பும் பயணிகளுக்கான தேவையை கருத்தில் கொண்டு, அனைத்து இடங்களிலும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். கூட்ட நெரிசலைத் தவிர்க்க, பயணிகள் www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வெள்ளிக்கிழமை பயணம் செய்ய இதுவரை 13864 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த எண்ணிக்கை அதிகரிக்ககூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.