அதிக வந்தே பாரத் ரயில்கள் கொண்ட மண்டலமாக மாறிய தெற்கு ரயில்வே
நேற்று மெய்நிகர் நிகழ்வின் மூலம் இந்தியா முழுவதும் ஒன்பது புதிய வந்தே பாரத் ரயில்களைத் துவக்கி வைத்தார் பிரதர் நரேந்திர மோடி. அவற்றில் மூன்று வந்தே பாரத் ரயில்களை தெற்கு ரயில்வே மண்டலம் பெற்றிருக்கிறது. முன்னதாக, ஏற்கனவே மூன்று வந்தே பாரத் ரயில்களைக் கொண்டிருந்த தெற்கு ரயில்வே மண்டலம், புதிய மூன்று ரயில்களுடன் மொத்தம் ஆறு வந்தே பாரத் ரயில்களைப் பெற்றிருக்கிறது. மேலும், இந்தியாவிலேயே அதிக வந்தே பாரத் ரயில்களைப் பெற்ற மண்டலமாகவும் இருக்கிறது தெற்கு ரயில்வே. ஆனால், வந்தே பாரத் ரயில்கள் இயங்கும் தூரத்தை வைத்துக் கணக்கிடும் போது, ஆறு வந்தே பாரத் ரயில்களுடன் நான்காவது இடத்தில் பின்தங்குகிறது தெற்கு ரயில்வே.
அதிக தூரத்திற்கு வந்தே பாரத் ரயில்களை இயக்கும் வடக்கு ரயில்வே:
தூரத்தின் அடிப்படையில், நான்கு வந்தே பாரத் ரயில்களுடன் முதலிடத்தில் இருக்கிறது வடக்கு ரயில்வே மண்டலம். அதனைத் தொடர்ந்து இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் மேற்கு மற்றும் வடமேற்கு ரயில்வே மண்டலங்கள் இடம்பெற்றிருக்கின்றன. நேற்று பிரதமர் மோடி தொடங்கி வைத்த வந்தே பாரத் ரயில்கள் யாவும், அரை-அதிவேக வந்தே பாரத் ரயில்களாகும். அதாவது, இந்த ரயில்களானது மணிக்கு 160-200 கிமீ வேகம் வரை செல்லும் திறனைப் பெற்ற ரயில்களாகும். இந்தப் புதிய ரயில்களுடன் சேர்த்து, தற்போது இந்தியாவில் 34 வந்தே பாரத் ரயில்கள் இயக்கத்தில் இருக்கின்றன. இவற்றில் 14 ரயில்கள் பதினாறு பயணிகள் பெட்டிகளுடனும், 20 ரயில்கள் எட்டு பயணிகள் பெட்டிகளுடனும் இயக்கப்பட்டு வருகின்றன.
சென்னையிலிருந்து நான்கு வந்தே பாரத் ரயில்கள்:
தெற்கு ரயில்வே இயக்கி வரும் ஆறு வந்தே பாரத் ரயில்களில், நான்கு ரயில்கள் சென்னையிலிருந்து இயக்கப்படுகிறது. சென்னையிலிருந்து திருநெல்வேலி, கோயம்புத்தூர், விஜயவாடா மற்றும் மைசூரூ ஆகிய நான்கு நகரங்களுக்கு வந்தே பாரத் இயக்கப்பட்டு வருகிறது. அதிக வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் மெட்ரோல் நகரங்களில் ஆறு வந்தே பாரத் ரயில்களைப் பெற்று முதலிடத்திருக்கிறது இருக்கிறது இந்திய தலைநகரான புதுடெல்லி. அதனைத் தொடர்ந்து, மும்பை மற்றும் ஹௌரா ஆகிய நகரங்களிலிருந்து நான்கு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. தற்போது இயங்கி வரும் 34 வந்தே பாரத் ரயில்களில், 24 ரயில்கள் நடப்பு (கடந்த ஏப்ரலில் துங்கிய) நிதியாண்டில் துவக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.