கசப்பான உறவே என் மீதான புகாருக்கு காரணம்: எம்பி மஹுவா மொய்த்ரா
அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் எம்பி ஆன மஹுவா மொய்த்ரா, தன் முந்தைய கசப்பான உறவே தன் மீதான புகார் காரணம் என, நாடாளுமன்ற நெறிமுறைகள் குழுவிடம் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மஹுவாவின் வாக்குமூலத்தை பதிவு செய்து கொண்ட நெறிமுறைகள் குழு, அவரை இன்று மாலை குறுக்கு விசாரணை செய்ய இருக்கிறது. நாடாளுமன்றத்தில் பாஜக மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக கேள்வி கேட்க ஹிராநந்தனி குழுமத்தைச் சார்ந்த தர்ஷனிடம், மஹுவா பணம் மற்றும் வெகுமதி பெற்றதாக, பாஜக எம்பி நிஷாந்த் தூபே நாடாளுமன்ற சபாநாயகரிடம் புகார் அளித்திருந்தார். மேலும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞரான டெஹாத்ராய், இதுகுறித்து சிபிஐயிடம் புகார் அளித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
முன்னாள் காதலர் பற்றி கூறிய மஹுவா
நாடாளுமன்ற நெறிமுறைகள் குழுவின் முன் எம்பி மஹுவா, வழக்கறிஞர் டெஹாத்ராய் உடனான தன்னுடைய பழைய காதலை குறித்து அதிகமாக பேசியதாகவும், இந்த குற்றச்சாட்டுகளுக்கு அவரையே காரணமாக சொன்னதாகவும் பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது. இருப்பினும் நெறிமுறைகள் குழுவில் இருந்த எதிர்க்கட்சி எம்பிக்கள் மஹுவாவுக்கு ஆதரவளித்துள்ளனர். காங்கிரஸ் சார்பில், உத்தம் குமார் ரெட்டியும், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் டேனிஷ் அலியும் மஹுவாவுக்கு ஆதரவளித்த நிலையில், பாஜக எம்பி விடி சர்மா குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க மஹுவாவிடம் கண்டனம் காட்டினார்.
மஹுவா மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் என்னவாகும்?
தொழிலதிபர் தர்ஷனுக்கு தன்னுடைய நாடாளுமன்ற லாகின் ஐடி மற்றும் பாஸ்வேர்டை வழங்கியதாக ஒப்புக்கொண்டுள்ள மஹுவா, தான் பணம் வாங்க வில்லை என மறுத்துள்ளார். இந்த விவகாரத்தில் தேசிய பாதுகாப்பு சமன் செய்யப்பட்டு இருப்பதாக பாஜக குற்றம்சாட்டி வரும் நிலையில், நெறிமுறைகள் குழுவில் இருந்த எதிர்கட்சி எம்பிக்கள், லாகின் ஐடி மற்றும் பாஸ்வர்ட் வழங்கியதற்கும், தேச பாதுகாப்பிற்கும் தொடர்பில்லை என தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர்கள், எத்தனை எம்பிக்கள் சுயமாக நாடாளுமன்றத்தில் கேள்விகளை கேட்கிறார்கள் என்று கேட்டதாக சொல்லப்படுகிறது. மஹுவா மீதான இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், பாராளுமன்ற உரிமை மீறலுக்காக அவர் பதவி பறிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
நெறிமுறைகள் குழுவில் தனிப்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டது- மஹுவா
முன்னதாக நெறிமுறைகள் குழுவில் தனிப்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறி, எம்பி மஹுவா மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளியேறினர். "இது என்ன மாதிரியான சந்திப்பு? அவர்கள் எல்லாவிதமான இழிவான கேள்விகளையும் கேட்கிறார்கள்," என்று மஹுவா வருந்தினார். "அவர்கள் என்னிடம், 'உன் கண்களில் கண்ணீர் வருகிறது' என்றார்கள். என் கண்களில் கண்ணீர் வருகிறதா?" என மஹுவா அவரின் கன்னங்களில் கைகளை வைத்தபடி செய்தியாளர்களிடம் கேட்டார். மேலும் மற்றொரு எதிர்க்கட்சி எம்பி, "அவர்கள் ரொம்ப அதிகமாக கேட்கிறார்கள்" என கூறிவிட்டு வெளியேறினார். ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள நெறிமுறைகள் குழு தலைவர் வினோத் சோங்கர், மஹுவா விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை எனவும், கேள்விகளிலிருந்து தப்பிக்கவே வெளியேறியதாகவும் கூறியுள்ளார்.