மாநிலங்களவை தேர்தலுக்கு இன்று வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறார் சோனியா காந்தி
ராஜ்யசபா தேர்தலில் ராஜஸ்தானில் போட்டியிட இருக்கும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். சோனியா காந்தி ராஜஸ்தானுக்குச் செல்வதற்காக, இன்று அதிகாலையில் தனது இல்லத்தை விட்டு வெளியேறியதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. பிப்ரவரி 27-ம் தேதி ராஜ்யசபா தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த திங்கள்கிழமை, மல்லிகார்ஜுன் கார்கே, முகுல் வாஸ்னிக், அஜய் மாக்கன், சல்மான் குர்ஷித், கே.சி.வேணுகோபால் ஆகியோர் கலந்து கொண்ட கட்சித் தலைவர்களின் உயர்மட்டக் கூட்டத்திற்குப் பிறகு, சோனியா காந்தி முதல் முறையாக மக்களவையில் இருந்து ராஜ்யசபாவுக்கு மாற இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி பிப்ரவரி 15 ஆகும்
1998 முதல் 2022 வரை கிட்டத்தட்ட 22 ஆண்டுகள் காங்கிரஸ் தலைவராக இருந்த சோனியா காந்தி, ஐந்து முறை மக்களவை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். சோனியா காந்தி 1999இல் உத்தரபிரதேசத்தின் அமேதி மற்றும் கர்நாடகாவின் பெல்லாரியில் போட்டியிட்டு இரண்டிலுமே வெற்றி பெற்றார். மேலும் அப்போது அவர் அமேதியைத் தக்க வைத்துக் கொண்டார். இன்று ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் போது ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோரும் சோனியா காந்தியுடன் இருப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி பிப்ரவரி 15 ஆகும். இதற்கிடையில், மன்மோகன் சிங் உட்பட 15 மாநிலங்களில் உள்ள மொத்தம் 56 ராஜ்யசபா உறுப்பினர்கள் வரும் ஏப்ரல் மாதம் ஓய்வு பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.