Loading...
Belonging நினைவுக் குறிப்பு நூலில் 1999 அரசியல் குழப்பம் மற்றும் அவசரப்பட்டதை ஒப்புக்கொண்ட சோனியா
1999-ஆம் ஆண்டு அரசியல் கணக்கீட்டுத் தவறுகள் குறித்து சோனியா காந்தி விரிவாக எழுதியுள்ளார்

Belonging நினைவுக் குறிப்பு நூலில் 1999 அரசியல் குழப்பம் மற்றும் அவசரப்பட்டதை ஒப்புக்கொண்ட சோனியா

எழுதியவர் Venkatalakshmi V
Nov 11, 2026
06:16 pm

செய்தி முன்னோட்டம்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி தனது சுயசரிதை நூலான 'பிலாங்கிங்: எ ஜெர்னி ஆஃப் லவ்' என்ற புத்தகத்தில், தனது அரசியல் வாழ்க்கையின் ஆரம்பக்கட்டத்தில் நிகழ்ந்த மிக முக்கியமான மற்றும் சவாலான தருணங்களில் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். கடந்த 1999-ஆம் ஆண்டு அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையிலான அரசு கவிழ்ந்ததைத் தொடர்ந்து, மாற்று அரசை அமைக்க குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்றது குறித்தும், அப்போது ஏற்பட்ட அரசியல் கணக்கீட்டுத் தவறுகள் குறித்தும் அவர் விரிவாக எழுதியுள்ளார்.

பெரும்பான்மை கணக்கு

1999-ஆம் ஆண்டு அரசியல் களம்

மறைந்த AIADMK பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஆதரவை திரும்பப் பெற்றதை அடுத்து, வாஜ்பாய் அரசு ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்தது.

அதனைத் தொடர்ந்து, எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி பிராந்தியக் கட்சிகள் மற்றும் இடதுசாரிகளின் ஆதரவுடன் மாற்று அரசை அமைப்பதற்கான முயற்சிகளில் இறங்கியது.

543 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையில் பெரும்பான்மைக்கு 272 இடங்கள் தேவைப்பட்ட நிலையில், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு 233 எம்.பி-க்களின் ஆதரவு இருந்ததாகவும், பல கட்சிகள் தங்களுக்கு ஆதரவு அளிப்பதாக உறுதியளித்திருந்ததாகவும் சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார்.

இதைக் கொண்டு பெரும்பான்மையை எட்டிவிடலாம் என்ற நம்பிக்கையுடன் அவர் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்று உரிமை கோரினார்.

சோனியா ஒப்புதல்

"நான் மிகவும் அவசரப்பட்டுவிட்டேன்"

குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து வெளியேறி செய்தியாளர்களை சந்தித்த தருணம் குறித்து அவர் கூறுகையில், "செய்தியாளர்களை நோக்கி நான் நடந்து சென்றபோது என் இதயம் சுருங்குவதை உணர்ந்தேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

நம்பகமான உறுதிமொழிகள் கிடைக்காதது மற்றும் தலைவர்களிடையே நிலவிய பிரதமர் பதவிக்கான போட்டி போன்ற காரணங்களால் மாற்று அரசு அமைக்கும் முயற்சி தோல்வியடைந்தது.

இந்த நிகழ்வை குறிப்பிட்டுள்ள சோனியா காந்தி, வலதுசாரி அரசை அகற்றுவதில் தீவிரமாக இருந்த தான், இந்த விஷயத்தில் மிகவும் அவசரப்பட்டுவிட்டதாக வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார்.

மேலும், மூத்த தலைவர் அர்ஜுன் சிங்கின் எச்சரிக்கையை கேட்காமல், பெயர் குறிப்பிடப்படாத மற்றொரு தலைவரின் பேச்சை கேட்டிருக்கக் கூடாது என்றும் அவர் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

வெளிநாட்டு வம்சாவழி

சரத் பவார் கலகமும், வெளிநாட்டு வம்சாவழி விவகாரமும்

1999-ஆம் ஆண்டின் இந்த தோல்வியைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் மற்றொரு உட்கட்சிப் பூசலும் வெடித்தது.

சோனியா காந்தியின் வெளிநாட்டு வம்சாவழி விவகாரத்தை எழுப்பி, CWC உறுப்பினர்களான சரத் பவார், பி.ஏ. சங்மா மற்றும் தாரிக் அன்வர் ஆகியோர் கடிதம் எழுதினர்.

இக்கூட்டத்தில் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக கூட்டத்தை விட்டு கண்ணீருடன் வெளியேறியதாக சோனியா குறிப்பிட்டுள்ளார்.

இந்த மோதலின் காரணமாக அவர்கள் காங்கிரசிலிருந்து வெளியேறி தேசியவாத காங்கிரஸ் கட்சியை (NCP) தொடங்கினர்.

இறுதியில் காங்கிரஸ் முயற்சி தோல்வியடைய, மீண்டும் நடைபெற்ற தேர்தலில் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT