காவிரி விவகாரம்: தமிழக டெல்டா மாவட்டங்களில் முழு கடையடைப்பு போராட்டம்
தமிழ்நாடு மாநிலத்திற்கு உரிய காவிரி நீரை வழங்காத கர்நாடகா அரசை கண்டித்தும், அதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளாத மத்திய அரசை கண்டித்தும் தமிழக டெல்டா மாவட்டங்களில் இன்று(அக்.,11) முழு கடையடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. காவிரி படுகை கூட்டி இயக்கம் சார்பில் தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இந்த அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இந்த போராட்டத்தால் ஒரு லட்சத்திற்கும் அதிகமான கடைகள் மூடப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது. காலை 6 மணிக்கு துவங்கி மாலை 6 மணி வரை நடைபெறவுள்ள இப்போராட்டத்தின் ஓர் பகுதியாக, மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு போராட்ட குழுவினர் மறியலில் ஈடுபடப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம்
அதன்படி, கும்பகோணம், பாபநாசம், பட்டுக்கோட்டை, உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் இயங்கும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்னர் மறியல் போராட்டம் நடக்கக்கூடும் என்பதால் அப்பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது என்றும் கூறப்படுகிறது. இப்போராட்டத்திற்கு திமுக, விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், விவசாயிகள் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல கட்சிகள் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகிறார்கள். டெல்லியில் இன்று காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் அவசரமாக கூடவுள்ள நிலையில், அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 13,000 கன அடி திறந்துவிட வேண்டும் என்னும் கோரிக்கையினை தமிழக அரசு முன்வைக்க முடிவு செய்துள்ளது. இத்தகைய சூழலில் இப்போராட்டம் இன்று நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.