ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தார் செந்தில் பாலாஜி
சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில், அமலாக்கத்துறையினரால் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி கடந்த ஜூலை 17ம்தேதி காவேரி மருத்துவமனையிலிருந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். இவரிடம் விசாரணைகளை மேற்கொண்ட அமலாக்கத்துறை கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி சுமார் 3,000 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிக்கை மற்றும் ஆவணங்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது என்று தெரிகிறது. இதுகுறித்த விசாரணை ஆட்சியர் அலுவலகத்திலுள்ள எம்.பி.,எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இதனிடையே செந்தில் பாலாஜி ஜாமீன் மனுவை தாக்கல் செய்தார். இந்நிலையில் இந்த மனுவினை மேற்கூறியவற்றுள் எந்த நீதிமன்றம் விசாரிக்கும்?என்னும் குழப்பம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல்
இதனால் இந்த குழப்பம் தீர சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இவ்வழக்கின் விசாரணை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றியது தவறு என்றும், அமலாக்கத்துறை கீழ் பதிவுசெய்யப்படும் வழக்குகளை விசாரிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு தான் அதிகாரம் உள்ளது என்று கூறி உத்தரவிட்டது. இதனையடுத்து செந்தில் பாலாஜி வழக்கு முழுவதும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து மாற்றப்பட்டது. இந்நிலையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்முறையீட்டினை ஏற்றுக்கொண்ட நீதிபதி அல்லி, மனுவாக தாக்கல் செய்யுமாறு கூறி அனுமதியளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.