LOADING...
ஜம்மு ரயில் நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு; புறா காலில் கட்டப்பட்டிருந்த செய்தியால் பரபரப்பு
வெடிகுண்டு எச்சரிக்கைக்குப் பிறகு, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன

ஜம்மு ரயில் நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு; புறா காலில் கட்டப்பட்டிருந்த செய்தியால் பரபரப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Aug 22, 2025
09:25 am

செய்தி முன்னோட்டம்

ஜம்மு ரயில் நிலையத்தில் IED வெடிகுண்டு மிரட்டல் தொடர்பான எச்சரிக்கைக்குப் பிறகு, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பாகிஸ்தான் எல்லையைத் தாண்டி வந்ததாக நம்பப்படும் புறா ஒன்றின் காலில் ரப்பர்பேண்ட் உதவியுடன் ஒரு துண்டு சீட்டு கட்டப்பட்டிருந்தது. அந்த மிரட்டல் குறிப்பு உருது மற்றும் இந்தி மொழிகளில் கையால் எழுதப்பட்டிருந்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். சில நாட்களுக்கு முன்பு, சர்வதேச எல்லை அருகே காவலில் இருந்த BSF (Border Security Force) வீரர்கள், அந்தப் புறாவை பிடித்தனர். புறாவுடன் வந்த குறிப்பில், "காஷ்மீர் ஹமாரா ஹை" (காஷ்மீர் எங்களுடையது) மற்றும் "வக்த் ஆ கயா ஹை"(நேரம் வந்துவிட்டது) போன்ற வாசகங்களை கொண்டிருந்தது. அதோடு, ஜம்மு ரயில் நிலையத்தில் IED வெடிக்கலாம் என்ற எச்சரிக்கையும் இருந்தது.

பாதுகாப்பு

மிரட்டல் செய்திக்கு பின்னர் பாதுகாப்பு தீவிரம்

இந்த நிகழ்வுக்கு பின்னர், ஜம்மு மாவட்டத்தில் உள்ள அனைத்து முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, ஜம்மு ரயில் நிலையத்தில் போக்குவரத்து, பயணிகள் மற்றும் பாக்ஸ் பெட்டிகள் என அனைத்தும் தீவிர சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. காவல்துறையுடன் துணை ராணுவப் படையினரும் இணைந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வெடிகுண்டு அகற்றும் குழுக்கள், நாய் படைகள் மற்றும் ட்ரோன்கள் மூலமாகவும் பரந்தளவிலான சோதனைகள் நடைபெற்று வருகின்றன. பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்ய, அனைத்து நுழைவாயில்களிலும் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. புறா பாகிஸ்தானிலிருந்து வந்திருக்கலாம் என்பதற்கான சாட்சியங்களை அதிகாரிகள் பரிசீலித்து வருவதாகவும், BSF, ஜம்மு-காஷ்மீர் காவல்துறை மற்றும் மத்திய புலனாய்வு அமைப்புகள் இணைந்து விசாரணையில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது