கனமழை எதிரொலி: புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை
கன்னியாகுமரி மற்றும் அதனை சுற்றியுள்ள தென்தமிழக கடலோர பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், ஏனைய வடதமிழக கடலோர பகுதிகளில், தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலவி வருகிறது. இதன் காரணமாக இன்று, நவம்பர் 22 , கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசியில் மிக கனமழையும், தூத்துக்குடி, ராமநாதபுரம், திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம். இந்த நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நகரங்களில் நேற்று காலை முதல் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.
காரைக்கால், புதுச்சேரியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
சென்னையில் நேற்று இரவு முதல், இன்று காலை வரை தொடர்ந்து மழை நீடித்தது. எனினும், வானிலை அறிக்கையின் படி, இன்று மிதமழையே இருக்கும் என்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆட்சியர்கள் அறிவித்தனர். எனினும், காரைக்கால் மாவட்டத்திற்கு உட்பட்ட திருநள்ளாறு, திருப்பட்டினம், அம்பகரத்தூர், கோட்டுச்சேரி, நெடுங்காடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதேபோல புதுச்சேரியிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால், இந்த இரு மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
நாகப்பட்டினம், மயிலாடுதுறை பள்ளிகள்
எனினும், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் இயங்கும் பள்ளிகளுக்கு மழை காரணமாக விடுமுறை அளிப்பது குறித்து அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களே முடிவு எடுக்கலாம் என அந்த மாவட்டங்களின் ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். விடுமுறை அளிப்பின், பள்ளிப்பாடங்கள் ஆன்லைன் வகுப்பாக எடுக்கப்படுமா என்பது குறித்தும் தலைமை ஆசிரியரே தீர்மானிக்கலாம் எனவும் கூறியுள்ளனர். அதனால் அந்த மாவட்டத்தின் பள்ளி மாணவர்கள், தங்கள் பள்ளி நிர்வாகத்தினை நேரடியாக அணுகி விடுமுறை குறித்த தகவல்களை தெரிந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.