பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விவகாரத்தில் இன்டர்போல் உதவியை நாடும் காவல்துறை
நேற்று சென்னையிலுள்ள 13 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட விவகாரத்தில், ஒரே நேரத்தில் இமெயில் மூலம் மிரட்டல் விடுத்த மர்ம நபரை காவல்துறை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். எனினும் தொழில்நுட்ப உதவியுடன் இமெயில் ஐபி முகவரியை கண்டுபிடிக்க முடியாத காரணத்தால், தற்போது மத்திய அரசு மற்றும் இண்டர்போல் உதவியை சென்னை போலீசார் நாடியுள்ளனர். நேற்று சென்னை அண்ணா நகர், பாரிஸ் கார்னர், ஆர்.ஏ. புரம், கோபாலபுரம் மற்றும் முகப்பேர் ஆகிய இடங்களில் செயல்படும் பிரபல தனியார் பள்ளிகளுக்கு ஒரே நேரத்தில், வெடிகுண்டு மிரட்டல் ஈமெயில் வடிவத்தில் வந்தது, தமிழகத்தை கதிகலங்க செய்தது.
மர்ம நபரை தேடும் காவல்துறை
இது குறித்து பேசிய சென்னை பெருநகர கூடுதல் ஆணையர் சின்ஹா, குற்றவாளியை பிடிக்க தனிப்படை அமைத்துள்ளது எனவும், தொழில்நுட்ப உதவியுடன் அந்த மெயில் அனுப்பட்ட ஐபி முகவரியை கண்டுபிடிக்க சைபர் க்ரைம் போலீசார் முயற்சித்து வருவதாக கூறினார். இந்த நிலையில் இதுவரை குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் சென்னை சைபர் கிரைம் போலீசார் திணறிவருகின்றனர். ஏற்கனவே, இதே போல சென்னை எலியட்ஸ் கடற்கரையில் குண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்ட அதே மெயில் ஐடியில் இருந்துதான் தற்போதும் இமெயில் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் உதவியை சென்னை போலீசார் நாடியுள்ளனர். தொடர்ந்து, இண்டர்போல் உதவியோடு குற்றவாளிகளை கைது செய்யவும் தமிழக காவல்துறை முடிவெடுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கிறது.