ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு: மத்திய உள்துறை அமைச்சகம் பதிலளிக்க உத்தரவு
தமிழக அரசு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ரிட் மனுவினை தாக்கல் செய்தது. அதில், அதில், 'தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்படும் மசோதாக்கள் மற்றும் அரசின் உத்தரவுகளுக்கு ஆளுநர் உரிய நேரத்தில் ஒப்புதல் அளிக்க வேண்டும்' என்றும், 'ஆளுநர் ஒப்புதல் அளிக்க கால நிர்ணயம் செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை இன்று(நவ.,10) உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதிகள் முன்னர் விசாரணைக்கு வந்தது. அப்போது, "ஆளுநர் தமிழக அரசின் செயல்பாடுகளை முடக்கும் வகையில் எந்தவொரு மசோதாக்களுக்கும், பணி நியமன கோப்புகள் உள்ளிட்டவைகளுக்கும் ஒப்புதல் அளிக்காமல் காலதாமதம் செய்கிறார். கைதிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட கோப்புகளில்கூட அவர் கையெழுத்திடுவதில்லை" என்று அரசு சார்பில் வாதாடப்பட்டது.
எதிர்மனுதாரருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு
மேலும், இதனால் தமிழக அரசின் உரிமைகள் மட்டுமல்லாமல், தனி நபர் உரிமையும் பறிக்கப்படுகிறது என்றும், தமிழ்நாடு முதல் காஷ்மீர் வரை ஆளுநர்களால் ஏற்படும் பிரச்சனைகளை எடுத்துரைக்கும் வகையில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றும் அவர்கள் தங்கள் வாதங்களை முன்வைத்தனர். அதனைத்தொடர்ந்து பேசிய நீதிபதிகள், "தமிழக ஆளுநருக்கு எதிரான வழக்கு என்பதால் இவ்வழக்கு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இவ்வழக்கை தீபாவளிக்கு பிறகு விசாரிக்கலாமா?" என்று கேட்டுள்ளனர். அதன்பின்னர் எதிர்மனுதாரருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், இதுகுறித்து ஆளுநரின் செயலாளர் மற்றும் மத்திய அமைச்சகம் பதிலளிக்க வேண்டும் என்று கூறி வழக்கின் விசாரணையினை வரும் 24ம்.,தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர். அன்றைய தினம் மத்திய அரசு சார்பிலான வழக்கறிஞர்களும் ஆஜராக வேண்டும் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.