
தலைநகரிலுள்ள தெருநாய்கள் உடனடியாக தங்குமிடங்களுக்கு மாற்றப்பட வேண்டும் - உச்சநீதிமன்றத்தின் கடுமையான உத்தரவு
செய்தி முன்னோட்டம்
தெருநாய்கள் தாக்குதலால் ஏற்படும் ரேபிஸ் மரணங்கள் அதிகரித்து வரும் நிலையில், உச்ச நீதிமன்றம் இன்று டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புறங்கள் (NCR) பகுதியில் உள்ள அனைத்து தெருநாய்களையும் குடியிருப்புப் பகுதிகளில் இருந்து தங்குமிடங்களுக்கு மாற்ற கடுமையான உத்தரவை பிறப்பித்தது. நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, "இந்த உத்தரவு அமல்படுத்தப்படுவதை தடுக்கும் எந்த அமைப்பும் நீதிமன்ற அவமதிப்புக்கு உட்படலாம்" எனவும் எச்சரிக்கையும் விடுத்தது. உச்ச நீதிமன்றம் அதன் உத்தரவில், அனைத்து தெருநாய்களும் குடியிருப்புப் பகுதிகளில் இருந்து தங்குமிடங்களுக்கு மாற்றப்பட வேண்டும், தெருநாய்கள் தத்தெடுக்கப்பட அனுமதிக்கப்பட மாட்டாது எனவும் கூறியது. காரணம், தத்தெடுப்பவர்கள் அநேகமானோர் பின்னர் அவற்றை மீண்டும் தெருவில் விட்டுவிடுவதால் அவற்றை தடுக்க இந்த உத்தரவு என்றனர்.
உத்தரவு
உச்ச நீதிமன்றம் கூறுவது என்ன?
உச்ச நீதிமன்றம் அதன் உத்தரவில் மேலும் தங்குமிடங்களில் சிசிடிவி கேமராக்கள் கட்டாயம் பொருத்தப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளது. மேலும் நாய்களுக்கு கருத்தடை மற்றும் தடுப்பூசி வசதிகளுடன் கூடிய நிபுணர்கள் இருக்க வேண்டும், நாய் கடி புகார்களுக்கான ஹெல்ப்லைன் அமைக்கப்பட வேண்டும் மற்றும் தடுப்பூசி இருப்பு மற்றும் பயன்பாடு குறித்து மாநில அரசுகள் மாதாந்திர அறிக்கைகள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது. "நாங்கள் இதை நம் மக்களின் பாதுகாப்புக்காகச் செய்கிறோம் — உணர்வுகளை விட, பொது நலமே முக்கியம்." என அந்த அமர்வு தெரிவித்தது. இந்த உத்தரவை மையமாக கொண்டு, டெல்லி அரசு விரைவில் செயல்படுவதாக உறுதியளித்துள்ளது.