முன்னாள் அமைச்சர் பொன்முடி வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி; மீண்டும் MLA ஆகிறார் பொன்முடி?
முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம். இதன் காரணமாக அவர் மீண்டும் எம்எல்ஏ பதவியில் தொடரக்கூடிய சாத்தியங்கள் இருக்கிறது. எனினும், இதுபற்றி, சட்டப்பேரவை செயலருடன் ஆலோசித்து, சபாநாயகர் அப்பாவு முடிவு எடுப்பார். கடந்த திமுக ஆட்சியின் போது, உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், பொன்முடி மீதும், அவரின் மனைவி விசாலாட்சி மீது லஞ்ச ஒழிப்புத்துறை 2011ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், அவர்களை விடுவித்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த மேல்முறையீட்டில், பொன்முடி, அவரது மனைவி ஆகியோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ. 50 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டது.
உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த பொன்முடி
உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பால், அமைச்சர் பதவியையும், எம்.எல்.ஏ. பதவியையும் இழந்தார் பொன்முடி. சபாநாயகர் அய்யாவுவும், பொன்முடியின் சட்டமன்ற தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்தார். இந்த நிலையில்தான், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை காலத்தில், பொன்முடி மற்றும் அவரது மனைவி இருவரும் சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. வழக்கின் விசாரணையின் போது, இரு தரப்பு வாதங்களை கேட்ட உச்ச நீதிமன்றம், முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. அதோடு பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சிக்கு ஜாமின் வழங்கியும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.