கைதுக்கு எதிராக ஹேமந்த் சோரன் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
நில மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் பேலா எம். திரிவேதி ஆகியோர் அடங்கிய சிறப்பு பெஞ்ச், இது குறித்து ஹேமந்த் சோரனை உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு கேட்டுக் கொண்டது. அதோடு, உயர்நீதிமன்றத்தில் ஏன் மனு தாக்கல் செய்யவில்லை என்றும் பெஞ்ச் கேள்வி கேட்டது. "நீதிமன்றங்கள் அனைவருக்குமானது. உயர் நீதிமன்றங்கள் அரசியலமைப்பு நீதிமன்றங்கள். நாம் ஒருவரை அனுமதித்தால், அனைவரையும் அனுமதிக்க வேண்டும்" என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது.
உச்சநீதிமன்றத்தில் நடந்தது என்ன?
விசாரணை ஆணையம் அனுப்பிய சம்மன்களை ரத்து செய்யக் கோரியும், கைது செய்யப்பட்டதை சட்டவிரோதமாக அறிவிக்கக் கோரியும் ஹேமந்த் சோரன் உச்ச நீதிமன்றத்தை அணுகினார். ஹேமந்த் சோரன் தரப்பில் ஆஜாரான மூத்த வழக்கறிஞர் சிபல், விசாரணையின் போது, உச்ச நீதிமன்றத்திற்கு விருப்ப அதிகாரம் உள்ளது என்றார். "இது அந்த விருப்புரிமையைப் பயன்படுத்த வேண்டிய ஒரு வழக்கு" என்றார். அதற்கு பதிலளித்த நீதிபதி கண்ணா, "அவர் கைது செய்யப்பட்டிருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது. எனவே, உயர் நீதிமன்றத்தை நாட வேண்டும்" என்றார். முன்னதாக நில மோசடி வழக்குடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் ED இன் சம்மன்கள் தொடர்பாக ஹேமந்த் சோரனை, ஜார்கண்ட் உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு, கடந்த ஆண்டு செப்டம்பரில் பிறப்பித்த உத்தரவை பெஞ்ச் மேற்கோளிட்டுள்ளது.