'விசாரணைக்கு தகுதியான எதையும் கனடா அனுப்பவில்லை': நிஜ்ஜார் வழக்கு குறித்து பேசிய எஸ் ஜெய்சங்கர்
காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட வழக்கில் கனடா நான்காவது நபரை கைது செய்திருக்கும் நிலையில், அது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பேசியுள்ளார். செய்தியாளர் கூட்டத்தில் பேசிய ஜெய்சங்கர், ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கு தொடர்பான ஏதேனும் ஆதாரங்கள் அல்லது தகவல்களை கனடா பகிர்ந்து கொண்டால், அது குறித்து விசாரணை நடத்த இந்தியா தயாராக உள்ளது என்றார். ஆனால், விசாரணைக்கு தகுதியான எதையும் கனடாவிடம் இருந்து இந்தியா பெறவில்லை என்பதையும் அவர் குறிப்பிட்டார். "குறிப்பிட்ட மற்றும் தகுதியான (ஆதாரங்கள்) எதையும் நாங்கள் இதுவரை பெறவில்லை. மேலும் கடந்த சில நாட்களாக இது தொடர்பாக எதுவும் மாறியிருப்பதாக எனக்குத் தெரியவில்லை" என்று அவர் கூறியுள்ளார்.
நிஜ்ஜார் கொலை வழக்கில் நான்காவது இந்தியர் கைது
வெளிநாட்டவர்கள் கைது செய்யப்படும்போது, அது அந்த நாட்டின் அரசாங்கத்திற்கோ அல்லது அந்த நாட்டின் தூதரகத்திற்கோ தெரிவிக்கப்பட வேண்டும். எனவே, இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இந்தியர்கள் குறித்த தகவல்களை கனடா இந்தியாவிடம் தெரிவித்தது என்றும் அவர் கூறியுள்ளார். கடந்த ஆண்டு ஜூன் 18ஆம் தேதி, கனடாவின் சர்ரேயில் உள்ள குருத்வாராவுக்கு வெளியே நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்டார். ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்பவர் இந்திய அரசாங்கத்தால் பயங்கரவாதி என்று அறிவிக்கப்பட்டவர் ஆவார். இந்நிலையில், அவரது கொலை வழக்கில் தொடர்பாக நான்காவது இந்தியர் கைது செய்யப்பட்டதாக கனேடிய போலீஸார் சனிக்கிழமை தெரிவித்தனர்.