
கேரளாவில் அதிகரிக்கும் டெங்கு - தமிழகத்தில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரம்
செய்தி முன்னோட்டம்
கேரளா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழையானது துவங்கியுள்ள நிலையில், அங்கு கொசுக்களின் உற்பத்தி அதிகரித்துள்ளதாக தெரிகிறது.
இதன் காரணமாக அம்மாநிலம் முழுவதும் கடந்த ஒரு மாதத்திற்குள்ளாகவே 25 பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கிறது.
இதனால் கேரளாவை ஒட்டியுள்ள தமிழக எல்லைப்பகுதி மாவட்டங்களான கோவை, கன்னியாகுமரி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
தமிழ்நாடு மாநிலத்தில் இதுவரை டெங்கு பாதிப்பு எதுவும் இல்லை என்றாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே எல்லைப்பகுதி மாவட்டங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
நடவடிக்கைகள் தீவிரம்
கண்காணிப்பு பணிகளில் 18 ஆயிரம் பேர் ஈடுபாடு
இந்த நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத் துறை கூடுதல் இயக்குநர் வடிவேலன் கூறியுள்ளதாவது, "கேரளாவில் டெங்கு பரவல் அதிகம் உள்ளதால் தமிழகத்தில் தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. அதனால், அம்மாநில டெங்கு பாதிப்புகள் குறித்த விவரங்களை மாவட்ட துணை சுகாதார இயக்குநருக்கு தகவல் அளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.
அதேபோல் பாதிப்புகளை உருவாக்கும் கொசுக்கள் மற்றும் லார்வா உற்பத்தி குறித்தும் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், வீடுகள், கல்லூரிகள், பள்ளிகள் போன்ற பொது இடங்களிலும் தனித்தனியே விழிப்புணர்வு ஏற்பாடுகளை ஏற்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.
இந்த கண்காணிப்பு பணிகளில் 18 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.