நிவாரண பொருட்களை இலவசமாக அரசு விரைவு பேருந்துகளில் அனுப்பலாம் - தமிழக அரசு
கடந்த டிச.,17ம் தேதி முதல் தமிழகத்தின் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் தொடர் கனமழை கொட்டி தீர்த்தது. அதன் காரணமாக அணைகள், ஆறுகள் போன்ற நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பி சாலைகளில் வெள்ளம் ஏற்பட்டு பெருக்கெடுத்தது. நேற்று(டிச.,19)மழை ஓய்ந்த நிலையில், வெள்ளம் வடிந்த பாடில்லை. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பாதிப்பு அதிகம். இதில் நெல்லை ஜங்ஷன் ரயில் நிலையம், பேருந்து நிலையம், ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய இடங்கள் வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது. தாமிரப்பரணி ஆற்றில் சுமார் ஒரு லட்ச கனஅடிக்கு மேலான தண்ணீர் திறக்கப்பட்டதால் அதன் கரையோர பகுதிகளில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
அனுப்பப்படும் நிவாரண பொருட்கள் அம்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு செல்லும்
இதனிடையே, நேற்று மழை ஓய்ந்த நிலையில், மீட்பு பணியினர் தமிழக அரசு உத்தரவின்பேரில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், அப்பகுதி மக்களுக்கு அளிக்கப்படும் நிவாரண பொருட்களை ஒருங்கிணைக்க தமிழகஅரசு சார்பில் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் அளிக்க விரும்புவோர் இவர்களை தொடர்புக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அண்டை மாவட்ட மக்கள் குறிப்பிட்ட அந்த 4 மாவட்ட மக்களுக்கு உதவ விரும்பினால், தங்களுடைய நிவாரண பொருட்களை பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு இயக்கப்படும் தமிழக அரசு விரைவு பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து அரசு பேருந்துகளிலும் கட்டணம் ஏதும் இல்லாமல் இலவசமாக அனுப்பலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அனுப்பப்படும் நிவாரண பொருட்கள் அம்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடுக்கப்படும், அங்கு அப்பொருட்கள் பிரித்தெடுத்து மக்களுக்கு விநியோகிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.