தலைநகர் டெல்லியை ஆளவிருக்கும் 4வது பெண் முதல்வர் ரேகா குப்தா; பதவியேற்பு நிகழ்வு விவரங்கள்
செய்தி முன்னோட்டம்
டெல்லியின் புதிய முதல்வராக ரேகா குப்தாவை நேற்று தேர்வு செய்தது பாஜக உயர்மட்ட குழு.
டெல்லியின் நான்காவது பெண் முதல்வராக ரேகா குப்தா, வரலாற்று சிறப்புமிக்க ராம்லீலா மைதானத்தில் இன்று பதவியேற்கிறார்.
ஷாலிமார் பாக் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் பந்தனா குமாரி மற்றும் காங்கிரஸின் பர்வீன் குமார் ஜெயின் ஆகியோரை எதிர்த்து ரேகா குப்தா 29,595 வாக்குகள் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
முதல் முறையாக எம்.எல்.ஏ ஆன ரேகா குப்தா, பல வருட அரசியல் அனுபவத்தை கொண்டுள்ளார்.
டெல்லி பல்கலைக்கழகத்தில் மாணவர் அரசியலில் இருந்து அவரது பயணம் தொடங்கியது. அவர் மூன்று முறை நகராட்சி கவுன்சிலராகப் பணியாற்றியுள்ளார், தெற்கு டெல்லி மாநகராட்சியில் (SDMC) மேயர் பதவியையும் அவர் வகித்துள்ளார்.
பதவியேற்பு
பதவியேற்பு நிகழ்வு விவரங்கள்
ராம்லீலா மைதானத்தில் நடைபெறும் பிரமாண்டமான நிகழ்வில் ரேகா குப்தா முதல்வராக பதவியேற்க உள்ளார்.
புதிய முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு லெப்டினன்ட் கவர்னர் வி.கே. சக்சேனா பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்.
விழா நடைபெறும் இடத்திலும் அதைச் சுற்றியும் 25,000க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் பணியாளர்கள் நிறுத்தப்படுவார்கள்.
வியாழக்கிழமை அதிக கூட்டம் கூடும் என்பதால், டெல்லி காவல்துறை போக்குவரத்து நெறிமுறைகளை விடுத்துள்ளது.
இந்த நிகழ்வில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கட்சித் தலைவர் ஜே.பி. நட்டா, பல பாஜக முதல்வர்கள் மற்றும் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
முக்கிய ஆர்எஸ்எஸ் தலைவர்கள் மற்றும் ஆன்மீக தர்ம குருக்கள் உட்பட சுமார் 30,000 விருந்தினர்களையும் பாஜக அழைத்துள்ளது.