பெகாசஸ் ஸ்பைவேர் வழக்கு: 2021இல் முக்கிய அரசியல் தலைவர்களின் மொபைல்கள் 'ஹேக்' செய்யப்பட்ட விவகாரம்
காங்கிரஸின் சசி தரூர், பவன் கேரா, சுப்ரியா ஷ்ரினேட்; திரிணாமுல் காங்கிரஸின் மஹுவா மொய்த்ரா; ஆம் ஆத்மியின் ராகவ் சாதா; சிபிஐ(எம்) தலைவர் சீதாராம் யெச்சூரி; சிவசேனாவின் பிரியங்கா சதுர்வேதி; மற்றும் AIMIMஇன் அசாதுதின் ஓவைசி ஆகிய எதிர்க்கட்சி தலைவர்கள் அரசாங்கத்தின் ஆதரவுடன் ஹேக்கிங் செய்பவர்கள் தங்களது ஐபோன்களை ஹேக் செய்ய முயற்சிப்பதாக புகார் அளித்துள்ளனர். ஆப்பிள் நிறுவனத்திடம் இருந்து அவர்களது ஐபோன்களுக்கு இது தொடர்பான எச்சரிக்கை வந்ததை அடுத்து அவர்கள் இன்று அரசாங்கத்தை குற்றம் சாட்டியுள்ளனர். இதற்கிடையில், "இந்த அறிவிப்பு பெகாசஸ் ஸ்பைவேர் பிரச்சனையை நினைவுபடுத்துகிறது" என்று ஆம் ஆத்மி கட்சியின் ராகவ் சாதா கூறியுள்ளார். இந்நிலையில், 2021இல் நடந்த பெகாசஸ் ஸ்பைவேர் வழக்கு என்றால் என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.
ஆம் ஆத்மி கட்சியின் ராகவ் சாதா கூறியிருப்பதாவது:
பெகாசஸ் ஸ்பைவேர் வழக்கு என்றால் என்ன?
ஜூலை 2021இல், NSO குழுமம் எனப்படும் இஸ்ரேலிய சைபர் பாதுகாப்பு நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட 'பெகாசஸ்' எனப்படும் ஸ்பைவேர், இந்தியா உட்பட பல நாடுகளில் உள்ள தனிநபர்களின் மொபைல் போன்களை கண்காணிக்க பயன்படுத்தப்பட்டதாக உலகளாவிய கூட்டு விசாரணைத் திட்டம் தெரிவித்திருந்தது. ஆனால், அப்போது உலகளாவிய கூட்டு விசாரணையின் அறிக்கையை இந்திய அரசு மீண்டும் மீண்டும் நிராகரித்தது. மேலும், இது தேசிய பாதுகாப்பைக் குறைத்து மதிப்பிடுவதற்கு சமம் என்றும் மத்திய அரசு கூறியிருந்தது. ஆனால், இது தொடர்பான உண்மை ஆதரங்களை வெளியிட அரசாங்கம் மறுத்துவிட்டது. எனினும்,பெகாசஸின் பயன்பாட்டை ஒருபோதும் அரசாங்கம் வெளிப்படையாக மறுக்கவில்லை.
இதை விசாரிக்க உச்ச நீதிமன்றம் உருவாக்கிய நிபுணர் குழு
அக்டோபர் 27, 2021 அன்று, உச்ச நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி NV ரமணா தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, பெகாசஸ் ஸ்பைவேர் வழக்கில் குற்றச்சாட்டுகளை விசாரிக்க நீதிபதி RV ரவீந்திரன்(ஓய்வு) தலைமையில் ஒரு நிபுணர் குழுவை நியமித்தது. இந்த குழுவிற்கு நீதிமன்றம் ஏழு விதிமுறைகளை உருவாக்கியது. இந்த ஸ்பைவேரின் மூலம் இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமை(தனியுரிமைக்கான உரிமை) மீறப்பட்டதாக என்பதை கண்டறியவே இந்த ஏழு விதிமுறைகள் உருவாக்கப்பட்டன. பெகாசஸை யார் வாங்கினார்கள், மனுதாரர்கள் உண்மையில் இந்த ஸ்பைவேரால் குறிவைக்கப்பட்டார்களா, இந்திய குடிமக்களுக்கு எதிராக பெகாசஸ் போன்ற ஸ்பைவேரைப் பயன்படுத்துவதை எந்தச் சட்டங்கள் நியாயப்படுத்துகின்றன போன்ற கேள்விகளுக்கு பாதிலளிப்பதற்காகவே அந்த நிபுணர் குழு உருவாக்கப்பட்டது.
உச்ச நீதிமன்ற விசாரணையில் என்ன கண்டுபிடிக்கப்பட்டது?
விசாரணைக்காக மனுதாரர்களுக்கு சொந்தமான 29 மொபைல் போன்கள் சமர்பிக்கப்பட்டிருந்தன. விசாரணையின் போது, அந்த 29 கைப்பேசிகளுள் 5 கைப்பேசிகளில் ஸ்பைவேர் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், அந்த ஸ்பைவேர்கள் பெகாசஸ் தான் என்பதை நிரூபிக்க எந்த உறுதியான ஆதாரமும் கிடைக்கவில்லை. மேலும், ஆகஸ்ட் 25, 2022 அன்று, இந்த பிரச்னையை உச்ச நீதிமன்றம் விசாரித்த போது, நிபுணர் குழுவுக்கு மத்திய அரசு சுத்தமாக ஒத்துழைக்கவில்லை என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறினர். இதைத் தொடர்ந்து, நான்கு வாரங்களுக்குப் பிறகு இந்த வழக்கை அடுத்த விசாரணைக்கு நீதிமன்றம் பட்டியலிட்டது. ஆனால், அதன்பின்னர் எந்த விசாரணையும் நடைபெறவில்லை.