தமிழக அரசின் வெள்ள நிவாரணம் பெற, ரேஷன் கார்டு அவசியம் இல்லை எனத்தகவல்
கடந்த வாரம், தமிழகத்தின் தலைநகர் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்கள் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. பல இடங்களில் பால், குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசியங்கள் கிடைக்காமல் பொதுமக்கள் திண்டாடினர். புயல் கரையை கடந்து ஒரு வாரம் ஆன நிலையில், இன்று முதல் பள்ளிகளும் கல்லூரிகளும் இயங்க தொடங்கி உள்ளன. இருப்பினும், தாழ்வான பகுதியில் வசிக்கும் மாணவர்களின் புத்தகங்கள் அனைத்தும் மழையில் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. வாகனங்கள், மின்ணணு சாதனங்கள், உடமைகள் என பலவும் நாசமாயின. அந்த நிலையில், மக்களுக்கு ரூ.6000 நிவாரண நிதி வழங்கப்படும் என அரசு அறிவித்து இருந்தது.
டோக்கன் முறையில் நிவாரண பணம்
புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 16-ஆம் தேதி முதல் டோக்கன் வழங்கவிருப்பதாக, அரசு அறிவித்துள்ளது. தற்போது வெள்ள சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால், அது முடிவடைந்ததும், டோக்கன் விநியோகம் நடைபெறும் எனக்கூறப்பட்டது. இந்த நிவாரண நிதியை 3-பிரிவுகளாக வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக இன்று செய்தி வெளியாகியுள்ளது. அதன்படி, ரேஷன் கார்டு வைத்திருப்போர், ரேஷன் கார்டிற்கு விண்ணப்பித்தோர் மற்றும் கார்டு இல்லாதோர். இதில் கடைசி பிரிவில் இருப்பவர்கள், சென்னையில் பல ஆண்டுகளாக வசிப்பவர்களாக இருக்க வேண்டும். அதற்கு ஆதாரமாக வாடகை ஒப்பந்தம், கேஸ் பில் உள்ளிட்ட ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும். இந்த நிலையில், வெள்ள நிவாரண நிதியை வங்கி கணக்கில் நேரடியாக செலுத்த உத்தரவிட கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.