
தொடரும் ஓலா, ஊபர் போராட்டம்; பாதுகாப்பு கோரும் ராப்பிடோ ஓட்டுனர்கள்
செய்தி முன்னோட்டம்
சமீபகாலமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் 'ரேப்பிடோ' பைக் டாக்ஸியின் சேவை அதிகரித்து வருகிறது.
இதனால் ஓலா, ஊபர் உள்ளிட்ட ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்கள் 'ரேப்பிடோ' ஓட்டுநர்களுடன் மோதல் போக்கில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
இந்நிலையில், நேற்று(அக்.,17) தமிழ்நாடு 'ரேப்பிடோ' பைக் டாக்ஸி ஓட்டுநர்கள் சங்கத்தினை சேர்ந்த சுமார் 50 பேர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
சங்கம்
பாதுகாப்பு கோரி புகார் மனு
அந்த புகாரில், தங்களை ஒரு சில ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்கள் தொடர்ந்து அச்சுறுத்தி வருவதோடு, தங்கள் மீது தாக்குதல் நடத்தி தரக்குறைவாக பேசுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இவர்களின் இந்த மோதல் போக்கு காரணமாக தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதால் பாதுகாப்பு வழங்கவேண்டும் என்றும் கோரியுள்ளனர்.
ஆய்வு
ஓலா, ஊபர் ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்கள் சங்கம் போராட்டம்
தொடர்ந்து, தங்களது புகாரை உடனடியாக ஆய்வு செய்து தக்க நடவடிக்கை எடுக்கும்படியும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதனிடையே இவர்களது இந்த புகாரை ஏற்ற காவல்துறை தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், முன்னதாக ஓலா, ஊபர் ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்கள் சங்கம் ஒன்றிணைந்து பைக் டாக்ஸி சேவைகளை நிறுத்த வேண்டும், வாகனத்திற்கான மீட்டர் கட்டணங்கள் நிர்ணயம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர்.
போராட்டம்
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடரும் போராட்டம்
அதன்படி, நேற்று முன்தினம்(அக்.,16) சென்னை சின்னமலை பகுதியிலுள்ள சரக்கு போக்குவரத்து அலுவலகம் முன்பு ஒன்றுக்கூடி இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதே போல் நேற்றும்(அக்.,17)இவர்களது போராட்டம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்தது.
இன்றும்(அக்.,18)இவர்களது போராட்டம் சென்னை ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்தில் சுமார் 10 ஆயிரம் ஓட்டுநர்கள் கொண்டு நடத்தப்படுகிறது.
கட்டணம்
இரு மடங்காக அதிகரித்த கட்டணம்
இதற்கிடையே இவர்கள் தங்கள் மொபைல் போனில் உள்ள செயலியை நீக்கி ஒரு லட்சத்திற்கும் மேலான ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருவதால் குறைந்தளவு வாகனங்களே இயக்கப்பட்டு வருகிறது என்று கூறப்படுகிறது.
இதன் காரணமாக, சென்னையில் 20கிமீ.,க்கு ரூ.400 வசூலிக்கப்பட்ட கட்டணம், தற்போது ரூ.1,200 முதல் ரூ.1,400 வரை வசூலிக்கப்படுவது பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இந்த கட்டணமானது அதிகரிக்க கூடும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.