நித்யானந்தாவின் கைலாசாவுக்கு பிரதமரானாரா ரஞ்சிதா: வைரலாகும் தகவல்
சாமியார் நித்யானந்தா அறிவித்திருக்கும் தனி நாடான கைலாசாவின் பிரதமர் என்ற பெயரில் சமூக வலைத்தளமான லிங்குடின்னில் ஒரு கணக்கு உருவாக்கப்பட்டிருக்கிறது. 'நித்யானந்த மாயி சுவாமி' என்ற பெயரிடப்பட்டிருக்கும் இந்த கணக்கில் நடிகை ரஞ்சிதாவின் புகைப்படம் ப்ரொபைல் படமாக வைக்கப்பட்டியிருக்கிறது. அந்த படத்திற்கு கீழே "தனித்த இறையாண்மை கொண்ட கைலாசாவின் பிரதமர்|| இந்துக்களுக்கான முதல் தேசம்" என்று எழுதப்பட்டிருக்கிறது. இந்த கணக்கின் செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி கொண்டிருக்கிறது. இது உண்மையா இல்லையா என்று தெரிய வில்லை என்றாலும் பலரும் இந்த செய்தியை பகிர்ந்து வருகின்றனர்.
ஐநா சபையின் கூட்டத்தில் கலந்து கொண்ட கைலாசாவின் பிரதிநிதி
2010ம் ஆண்டு கார்நாடக அமர்வு நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்டினை நித்யானந்தா மீது பிறப்பித்தது. மேலும், இவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளும், குஜராத் ஆசிரமத்தில் இருந்த குழந்தைகளை கடத்திய வழக்குகளும் உள்ளன. இந்திய மாநிலங்களில் பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய நித்யானந்தா வழக்குகளில் இருந்து தப்பி, 'கைலாசா' என்னும் நாட்டினை உருவாக்கி அதில் தற்போது வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், கடந்த மார்ச் மாதம், ஐநா சபையின் பொருளாதார மற்றும் கலாச்சார உரிமைகளுக்கான 19வது மாநாட்டின் 73வது கூட்டம் நடந்தது. இந்த ஐநா கூட்டத்தில் கைலாசாவை சேர்ந்த பெண் பிரதிநிதி ஒருவர் கலந்து கொண்டு பேசியது, உலகெங்கிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், ரஞ்சிதா குறித்த இந்த தகவல் வெளியாகி வைரலாகி கொண்டிருக்கிறது.