அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக தேதி அறிவிப்பு
உத்தர பிரதேசம்: இந்து கடவுள் ராமரின் பிறந்த இடமாக கருதப்படும் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலின் கும்பாபிஷேகம் அடுத்த வருடம் ஜனவரி-16 முதல் 24 வரை நடைபெற உள்ளது. இரண்டு மாடிகளை கொண்ட இந்த கோவிலின் முதல் தளம் கட்டப்பட்ட பிறகு, கோயிலின் கருவறையில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் என்று ராமர் கோவில் அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் தெரிவித்துள்ளார். தற்போது கருவறையின் கட்டுமானப் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், மேற்கூரை பணிகள் 80% நிறைவடைந்திருக்கிறது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது பல தசாப்தங்களாக ஒரு சர்ச்சைக்குரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. இந்நிலையில், 2024 மக்களவைத் தேர்தல் நடைபெறுவதற்கு முன் இந்த கோவிலின் கும்பாபிஷேகம் நடத்தப்பட இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
2019 ஆம் ஆண்டு ராமர் கோவில் கட்டுவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதித்தது
1992ஆம் ஆண்டு அயோத்தியில் அமைந்திருந்த பாபர் மசூதி, விஸ்வ ஹிந்து பரிஷத்(VHP) மற்றும் ஆளும் பாரதிய ஜனதா கட்சி(பாஜக) ஆகியவற்றால் சட்டவிரோதமாக இடிக்கப்பட்டது. அதன் பிறகு, இந்து-முஸ்லீம் பிரச்சனையாக மாறிய இந்த வழக்கு, பல வருடங்களாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது. 2019 ஆம் ஆண்டில் தான் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு உச்ச நீதிமன்றம் ஒருமனதான அனுமதித்தது. ராமர் கோவில் அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் உத்தரபிரதேசத்தில் உள்ள அயோத்திக்கு நேற்று சென்று பார்வையிட்டார். அதனையடுத்து, கருவறையின் கட்டுமானப் பணிகள் முடிந்துவிட்டதாக அறிவித்த அவர், ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா 10 நாட்கள் நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.