துரைமுருகன் ரொம்ப டேஞ்சர்; ஸ்டாலினை மேடையில் வைத்துக்கொண்டு துரைமுருகனை கலாய்த்த ரஜினிகாந்த்
சென்னையில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 24) அன்று நடைபெற்ற 'கலைஞர் எனும் தாய்' நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்த், துரைமுருகனை காட்டி முதல்வரை எச்சரித்தது கூட்டத்தில் கலகலப்பை ஏற்படுத்தியது. தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கலைஞருடனான தனது பயணம் குறித்த தொகுப்புகளை 'கலைஞர் எனும் தாய்' என்ற பெயரில் புத்தகமாக எழுதியுள்ளார். இந்த புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின் புத்தகத்தை வெளியிட, நடிகர் ரஜினிகாந்த் அதை பெற்றுக் கொண்டார். இந்த கூட்டத்தில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் திமுகவினர், கலைஞர், ஸ்டாலின் குறித்து பல விஷயங்களை பேசினார்.
கலைஞர் குறித்து ரஜினிகாந்த்
இந்த விழாவிற்கு வரும்போது என்ன பேசவேண்டும் என்பதை விட என்ன பேசக் கூடாது என்பதைத் தான் அதிகம் குறிப்பெடுத்து வந்தேன் எனக் கூறி பேச்சைத் தொடங்கிய ரஜினிகாந்த், இந்த நிகழ்ச்சியில் அரசியல் ஏதும் இல்லை எனக் எ.வ.வேலு கூறியதாக தெரிவித்தார். ரஜினி மேலும் கூறுகையில், "கலைஞர் என்றால் சினிமா, இலக்கியம், அரசியல் என்ற மூன்றுதான். சினிமா குறித்து ஏற்கனவே நிறைய பேசிவிட்டேன். அவரது இலக்கியம் எனக்குத் தெரியாது. அடுத்து இருப்பது அரசியல்தான். அதைப்பற்றி பேச வேண்டும் எனில் மிகவும் ஜாக்கிரதையாக பேச வேண்டும். நண்பர் மு.க.ஸ்டாலின் முதல்வரான பிறகு எல்லாத் தேர்தல்களிலும் வெற்றி பெற்று மிகப்பெரிய ஆளுமையாக உள்ளார்." என்றார்.
துரைமுருகன் குறித்து பேசிய ரஜினிகாந்த்
தொடர்ந்து பேசிய ரஜினிகாந்த், "பள்ளி ஆசியர்களுக்கு புதிய மாணவர்கள் பிரச்சினையே இல்லை, பழைய மாணவர்களை சமாளிப்பதுதான் பிரச்சினை. இங்கு அப்படி பலர் உள்ளனர். அவர்கள் எல்லாம் நல்ல ரேங்க் எடுத்தும் கிளாஸைவிட்டு செல்லமாட்டோம் என உட்கார்ந்து கொண்டு உள்ளனர். அவர்களை சமாளிப்பது கடினம். இங்கு துரைமுருகன் என்று ஒருவர் உள்ளார். கலைஞர் கண்ணிலேயே விரலைவிட்டு ஆட்டியவர். அவரிடம் ஒரு விஷயத்தை செய்கிறோம் அண்ணே என்றால், அப்படியா சந்தோஷம் என்பார். அதை மகிழ்ச்சியாக சொல்கிறாரா, என்னடா இப்டி பன்றீங்கண்ணு சந்தோஷம்னு சொல்கிறாரா? என புரியாது, ஸ்டாலின் சார் ஹேட்ஸ் ஆஃப் டூ யூ." என்றார். துரைமுருகன் குறித்து எச்சரிக்கும் தொனியில் ரஜினிகாந்த் கலாய்த்து பேசியது கூட்டத்தில் இருந்த அனைவரிடமும் சிரிப்பலையை ஏற்படுத்தியது.