ஒரே பாலின திருமணங்களுக்கு ராஜஸ்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது: மத்திய அரசு
செய்தி முன்னோட்டம்
ஒரே பாலின திருமண விவகாரம் தொடர்பாக ஏழு மாநிலங்களில் இருந்து பதில் கிடைத்துள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு இன்று(மே 10) தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான ராஜஸ்தான் இந்த யோசனையை எதிர்த்துள்ள நிலையில், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், ஆந்திரா, மணிப்பூர், அசாம் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்கள் இதை ஆய்வு செய்ய கூடுதல் அவகாசம் கோரியுள்ளது.
ஒரே பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கக் கோரி தொடரப்பட்ட மனுக்களை ஒன்பதாவது நாளாக உச்ச நீதிமன்ற பெஞ்ச் விசாரித்து வருகிறது.
இந்நிலையில், ஒரே பாலின திருமணங்கள் குறித்த தங்களது நிலைப்பாட்டை மாநிலங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதி இருந்தது.
details
திருமணத்தின் சூழல் மாறிவிட்டது: நீதிபதிகள்
அந்த கடிதத்திற்கு தற்போது வரை ஏழு மாநிலங்கள் பதிலளித்துள்ளன.
தனிப்பட்ட சட்டங்களுக்குள்(மதம் சார்ந்த திருமண சட்டங்கள்) நுழைய முடியாது என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தெளிவுபடுத்தி இருந்த போதிலும், மாநிலங்களுக்கு இது குறித்து தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஒரே பாலின திருமணங்களுக்கு இடமளிக்கும் வகையில் சிறப்பு திருமணச் சட்டத்தின்(மதசார்பற்ற திருமண சட்டம்) வரம்பை விரிவுபடுத்த முடியுமா என்பதை ஆராய்வதற்கு நீதிமன்றம் முடிவு செய்திருந்தது.
இது குறித்து நேற்று பேசிய நீதிபதிகள், "வழக்கம், கலாச்சாரம், மதத்தை ரீவைண்ட் செய்து பார்த்தால் 50 ஆண்டுகளுக்கு முன்பு சாதி-கலப்பு திருமணங்கள் அனுமதிக்கப்படவில்லை. மத-கலப்பு திருமணங்கள் பற்றி நாம் கேள்விப்பட்டது கூட இல்லை. எனவே, திருமணத்தின் சூழல் மாறிவிட்டது." என்று தெரிவித்திருந்தனர்.