ஒரே பாலின திருமணங்கள் பற்றி மாநிலங்கள் என்ன நினைக்கிறது: மத்திய அரசு கேள்வி
இந்தியாவில் ஒரே பாலின திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்குவது தொடர்பான இறுதி வாதங்களை உச்ச நீதிமன்றம் விசாரித்து வரும் நிலையில், இது குறித்து மாநிலங்கள் தங்களது கருத்துக்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டு கொண்டுள்ளது. ஒரே பாலின திருமணங்களுக்கு முற்றிலுமாக எதிர்ப்பு தெரிவித்து வரும் மத்திய அரசு, இது தொடர்பான மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் கேட்டு கொண்டது. இது கொள்கை ரீதியான விஷயம் என்பதால் ஒரே பாலின திருமணங்களுக்கான சட்டத்தை நாடாளுமன்றம் தான் இயற்ற வேண்டும் என்றும் இந்த விஷயத்தில் மாநிலங்களின் கருத்து மிக முக்கியம் என்றும் மத்திய அரசு நேற்று உச்ச நீதிமன்றத்தில் கூறியது. ஆனால், இந்த கோரிக்கை நீதிமன்றத்தால் நேற்று நிராகரிக்கப்பட்டது.
உச்ச நீதிமன்ற விசாரணையில் மாநிலங்கள் கலந்துகொள்ள வேண்டும்: மத்திய அரசு
இந்நிலையில், ஒரே பாலின திருமணங்கள் குறித்து 10 நாட்களுக்குள் மாநிலங்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்குமாறு மத்திய அரசு இன்று(ஏப் 19) கேட்டுக் கொண்டது. ஒரே பாலின திருமணங்கள் தொடர்பான விவாதம் மாநிலங்களின் சட்டவாக்கத்திற்கு உட்பட்டது, எனவே உச்ச நீதிமன்றத்தில் நடந்து வரும் விசாரணையில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் கலந்துகொண்டு தங்கள் தரப்பு வாதங்களை கூற வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு ஒரு புதிய பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது. ஒரே பாலின திருமணம் என்பது நாட்டின் சமூக நெறிமுறைகளுக்கு எதிரான ஒரு "நகர்ப்புற உயரடுக்கினரின் கருத்து" என்று மத்திய அரசு சமீபத்தில் கூறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.