திருமணம் மறுக்கப்படுவது குடியுரிமை மறுக்கப்படுவதற்கு சமம்: ஒரே பாலின திருமணங்களுக்கான இறுதி வாதம்
இந்தியாவில் ஒரே பாலின திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்குவது தொடர்பான இறுதி வாதங்களை ஐந்து உச்சநீதிமன்ற நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று(ஏப் 18) விசாரித்தது. இதற்காக பல மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் போடப்பட்டுள்ளது. நீதிபதிகள் எஸ்கே கவுல், எஸ்ஆர் பட், ஹிமா கோஹ்லி, பிஎஸ் நரசிம்மா மற்றும் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுக்களை விசாரித்தது. முதற்கட்டமாக, தற்போதைக்கு இந்த பிரச்சனை சிறப்பு திருமண சட்டத்திற்கு(மதசார்பற்ற திருமண சட்டம்) கீழ் மட்டுமே அணுகப்படும் என்பது தீர்மானிக்கப்பட்டுள்ளது. மனுதாரர் ஒருவரின் வழக்கறிஞர், "திருமணம் என்பது அனைவருக்கும் பொதுவான அடிப்படை உரிமையாகும். திருமண உரிமையை நீங்கள் மறுக்கும்போது, எனக்கான குடியுரிமையையும் நீங்கள் மறுக்கிறீர்கள்." என்று உச்ச நீதிமன்றத்தில் வாதாடினார்.
பிறப்புறுப்பை வைத்து பாலினத்தை தீர்மானிக்க முடியாது: தலைமை நீதிபதி
மத்திய அரசு சார்பாக ஆஜராகி இருந்த வழக்கறிஞர் துஷார் மேத்தா, இந்த மனுக்களை உச்சநீதிமன்றம் நிராகரிக்க வேண்டும் என்றும் இது நாடாளுமன்றமும் மாநிலங்களும் சேர்ந்து எடுக்க வேண்டிய முடிவு என்றும் கூறினார். மேலும், அவர் , "சிறப்பு திருமண சட்டத்தின் நோக்கமே உடலால் ஆணாகவும் பெண்ணாகவும் இருப்பவர்களுக்கு இடையிலான உறவாகும்." என்று கூறினார். அதற்கு தலைமை நீதிபதி, "பிறப்புறுப்பு என்ன என்பது இங்கு கேள்வி அல்ல. இது(பாலினம்) அதைவிட மிகவும் சிக்கலான ஒரு விஷயம். எனவே, சிறப்புத் திருமணச் சட்டம் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலானது என்று கூறினால், ஆண் பெண் என்பது பிறப்புறுப்பின் அடிப்படையில் வகுக்கப்படுவது முழுமை அடையாத ஒன்றாக இருக்கும்." என்று கூறினார். இந்த மனுக்களின் விவாதங்கள் நாளை மீண்டும் தொடரும்.