தமிழ்நாடு, புதுச்சேரி மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும்
வட இலங்கை கடற்கரை பகுதியினை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதே நேரம் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாளை(ஜூன்.,27)திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. அதனையடுத்து, கடலூர், சென்னை, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுப்பு
இதனை தொடர்ந்து சென்னை மாவட்டத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு இடி மின்னல் கொண்ட கனமழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் மன்னார் வளைகுடா, இலங்கை மற்றும் தமிழகத்தினை ஒட்டியுள்ள வங்கக்கடல் பகுதிகளில் 40-50கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்றும், ஆந்திர மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியிலும் 40-50கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் குறிப்பிட்ட இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்பதால் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.