சிறைக்கைதிகளுக்கு பயங்கரவாத பயிற்சி அளிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு: 7 மாநிலங்களில் என்ஐஏ சோதனை
லஷ்கர்-இ-தொய்பா (LeT) பயங்கரவாதிகள் சிறைக்கைதிகளை தீவிரவாதிகளாக மாற்றியது தொடர்பான வழக்கில் தேசிய புலனாய்வு முகமை(NIA) இன்று பல இடங்களில் சோதனை நடத்தியது. இந்த வழக்கின் சந்தேக நபர்களுடன் தொடர்புடைய கர்நாடகா, தமிழ்நாடு உட்பட 7 மாநிலங்களில் உள்ள 17 இடங்களில் பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பு இன்று தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டது. கடந்த ஆண்டு ஏழு கைத்துப்பாக்கிகள், நான்கு கைக்குண்டுகள், ஒரு மேகசின், 45 லைவ் ரவுண்டுகள் மற்றும் நான்கு வாக்கி-டாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள்/வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து பெங்களூரு நகர காவல்துறை இந்த வழக்கை பதிவு செய்தது. கடந்த ஆண்டு அக்டோபரில் இந்த வழக்கை எடுத்துக் கொண்ட என்ஐஏ, அடுத்தடுத்து சோதனைகளை நடத்தியது.
குற்றம்சாட்டப்பட்டுள்ள பயங்கரவாதிகள்
முதலில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது. பெங்களூரு மத்திய சிறையில் இருந்த இந்த ஐந்து பேரையும் தீவிரவாதிகளாக மாற்றிய லஷ்கர் இடி செயல்பாட்டாளரும் தலைவருமான டி நசீர், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் ஆவார். மேலும், தற்போது தப்பி ஓடி தலைமறைவாக உள்ள ஜுனைத் அகமது மீதும் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 2013ஆம் ஆண்டு முதல் பெங்களூரு மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நசீர், வன்முறை செயலில் ஈடுபடுவதற்காக பிற குற்றவாளிகளை பயங்கரவாதிகளாக மாற்றியுள்ளார்.