பாட்னாவில் நடக்கும் எதிர்க்கட்சி பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி
நாடாளுமன்ற தேர்தல் வரும் 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், எதிர்கட்சிகளை ஓரணியாக திரட்டும் முயற்சியில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஈடுபட்டுள்ளார். இதற்காக அவர் பாட்னாவில் இன்று(ஜூன்.,23)தேசியளவிலான எதிர்க்கட்சி கூட்டத்தினை ஏற்பாடு செய்துள்ளார். இந்த கூட்டத்தில் அனைத்து கட்சிகளின் தலைவர்களும் கலந்துக்கொள்ளவேண்டும் என்றும் முன்னதாகவே அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி பாட்னாவில் 15 கட்சி தலைவர்கள் தற்போது இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் இக்கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, "நமது நாட்டில் தற்போது பாஜக வெறுப்புணர்வு மற்றும் வன்முறையினை பரப்பி தேசத்தினை பிளவுபடுத்த செயல்பட்டு வருவதாக தெரிகிறது. ஆனால், எதிர்க்கட்சியாக உள்ள நாங்கள் அனைவரும் அன்பினை பரப்பி அனைவரையும் ஒன்றிணைக்க முயற்சிக்கிறோம். அதற்குத்தான் இங்கு வந்துள்ளோம்" என்று கூறினார்.
பாஜக 2, 3 நபர்கள் வளர்ச்சிக்காக செயல்பட்டு வருகிறது - ராகுல் காந்தி
தொடர்ந்து பேசிய அவர்,"நாட்டில் தற்போது தத்துவ ரீதியான மோதல் நடக்கிறது. அதில் ஒன்று காங்கிரஸ் கட்சியின் தேச ஒற்றுமைக்கான சிந்தனை, மற்றொன்று ஆர்எஸ்எஸ்'ன் தேசப்பிரிவினை சிந்தனை" என்று கூறினார். தொடர்ந்து, "பாரத் ஜோடா யாத்திரையின் போது பீகார் மக்கள் தங்களது முழு பங்களிப்பினை அளித்தனர். காங்கிரஸ் மீதான நம்பிக்கையால் தான் பீகார் மக்கள் யாத்திரையில் பங்கேற்றனர்" என்று தெரிவித்தார். மேலும், கர்நாடகா தேர்தலின்போது பாஜக அரசியல் தலைவர்கள் அனைவரும் அங்குச்சென்று வெற்றிப்பெறுவோம் என கூக்குரலிட்டார்கள். ஆனால் இறுதியில் தோல்வியுற்றனர் என்பதனையும் அவர் சுட்டிக்காட்டி பேசியுள்ளார். காங்கிரஸ் கட்சி ஏழைகளுக்காக செயல்படுகிறது என்று கூறிய அவர், பாஜக 2, 3 நபர்கள் வளர்ச்சிக்காக செயல்பட்டு வருகிறது என்பது மக்களுக்கே தெரியும் என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.