8 முன்னாள் இந்திய கடற்படை வீரர்களின் மரண தண்டனை குறைப்பு; அடுத்தது என்ன?
கத்தார் நாட்டில் உளவு பார்த்ததாக கூறி 8 முன்னாள் இந்திய வீரர்களுக்கு, கடந்த அக்டோபர் மாதம் மரண தண்டனை விதிக்கப்பட்டது. அதனை அடுத்து மத்திய அரசு மேல்முறையீடு செய்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது அந்த மரண தண்டனை, சிறை தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளதாக நேற்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. எனினும், இந்த வழக்கு சார்ந்த விவரங்கள் மிகவும் ரகசியமாக பதுக்கப்பட்டதால், அதன் விவரங்கள் தெரியவில்லை எனவும் கூறப்பட்டது. மேலும், விரிவான தீர்ப்புக்காக காத்திருப்பதாக தெரிவித்துள்ள மத்திய அரசு, விவகாரம் தொடர்பாக சட்ட வல்லுநர்கள் மற்றும் வீரர்களின் குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதாக விவரித்துள்ளது. தற்போது, இந்த தண்டனை குறைக்கப்பட்டதை அடுத்து, அடுத்த கட்டநடவடிக்கை என்னவாக இருக்கும் என செய்திகள் வெளியாகியுள்ளன.
தண்டனை குறைப்பு குறித்து இந்தியா கூறியது என்ன?
"கத்தாருக்கான எங்கள் தூதர், பிற அதிகாரிகள், மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். இந்த விவகாரத்தின் ஆரம்பம் முதல் நாங்கள் அவர்களுக்கு ஆதரவாக இருந்தோம். மேலும் அனைத்து தூதரக மற்றும் சட்ட உதவிகளையும் நாங்கள் தொடர்ந்து வழங்குவோம்" என்று MEA அறிக்கை கூறியது. அந்த அறிக்கையில், "இந்த வழக்கின் விசாரணையின் ரகசியம் மற்றும் உணர்வுப்பூர்வமான தன்மை காரணமாக, இந்த நேரத்தில் மேற்கொண்டு எந்த கருத்தையும் கூறுவது பொருத்தமாக இருக்காது" என்று கூறியதுடன், நடவடிக்கைகளின் உணர்திறன் மற்றும் ரகசிய தன்மையையும் குறிப்பிட்டுள்ளது.
அடுத்து என்ன?
"இந்தியாவிற்கும் கத்தாருக்கும் இடையில் தண்டனை விதிக்கப்பட்ட நபர்களை மாற்றுவதற்கான ஒப்பந்தத்தின்" கீழ், எட்டு முன்னாள் கடற்படை அதிகாரிகளை இந்தியாவிற்கு திருப்பி அனுப்புவது மற்றும் இந்திய சிறைகளில் அவர்களது காலத்தை அனுபவிக்கும் விருப்பத்தை இந்தியா ஆராயலாம். டிசம்பர் 2, 2014 அன்று இந்திய அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட இந்த ஒப்பந்தம், இரு நாடுகளைச் சேர்ந்த கைதிகளும், தங்கள் குடும்பங்களுக்கு அருகில், எஞ்சியிருக்கும் தண்டனையை அனுபவிக்க உதவுகிறது. அது அவர்களின் சமூக மறுவாழ்வுக்கு உதவுகிறது.