போடு வெடிய! தீபாவளிக்கு முந்தைய நாளும் விடுமுறை அறிவித்து புதுச்சேரி அரசு உத்தரவு
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் புதன்கிழமையும் (அக்டோபர் 30) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 31 அன்று வியாழக்கிழமை வருகிறது. இதையொட்டி, மக்களின் வசதிக்காக புதுச்சேரியில், தீபாவளிக்கு முந்தைய நாளும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு புதுச்சேரி, காரைக்கால் மற்றும் யானாம் பகுதிகளில் அக்டோபர் 30 அன்று அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள், தொழிற்கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அளித்து புதுச்சேரி துணைநிலை ஆளுநர் அறிவித்துள்ளார். அக்டோபர் 30 விடுமுறையை ஈடுகட்டும் வகையில், நவம்பர் 16 வேலை நாளாக கருதப்படும் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் தீபாவளிக்கு தொடர் விடுமுறை
புதுச்சேரி அரசின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, அங்கு அக்டோபர் மற்றும் 31 என இரண்டு நாட்கள் தீபாவளி விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும், நவம்பர் 1 அன்று புதுச்சேரி விடுதலை நாள் வருகிறது. தொடர்ந்து நவம்பர் 2 அன்று கல்லறை நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த இரண்டு நாட்களுக்கும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அரசு விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இதையடுத்து நவம்பர் 3 ஞாயிற்றுக்கிழமை வருவதால், புதுச்சேரி மக்களுக்கு ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்துள்ளது. இதற்கிடையே, தமிழகத்திலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தீபாவளிக்கு அடுத்த நாளான நவம்பர் 1 அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.