புதுச்சேரியில் 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு விரைவில் டேப்லெட்: குழந்தைகள் தின விழாவில் முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
புதுச்சேரி மாநிலத்தில் பயிலும் 9 மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு விரைவில் இலவசமாக டேப்லெட் (Tablet) வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என முதலமைச்சர் என். ரங்கசாமி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். புதுச்சேரி பள்ளிக் கல்வி இயக்ககத்தின் சார்பில் கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள காமராஜர் மணிமண்டபத்தில் இன்று நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்த அவர், மண்டல அளவில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கிப் பேசும்போது இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
அரசு பள்ளி மாணவர்கள்
9, 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டேப்லெட் மற்றும் லேப்டாப் திட்டம்
விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் ரங்கசாமி, "புதுச்சேரி மாநிலம் அனைவரும் படித்த மாநிலமாகவும், தரமான கல்வியைப் பெற்ற மாநிலமாகவும் திகழ வேண்டும் என்பதே அரசின் உயரிய நோக்கம்.
மாணவர்களின் நவீனக் கல்வித் தேவையைக் கருத்தில் கொண்டு ஏற்கனவே லேப்டாப் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான லேப்டாப்களும் விரைவில் வழங்கப்பட உள்ளன.
அதன் தொடர்ச்சியாக, 9 மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் டேப்லெட் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இத்திட்டமும் விரைவில் செயல்பாட்டுக்கு வரும்" என்று தெரிவித்தார்.
மேலும், அரசுப் பள்ளிகளைப் போலவே அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கும் அனைத்து அடிப்படை வசதிகளும் சென்றடைவதோடு, ஆசிரியர்களுக்கான ஊதியமும் முறையாக வழங்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
மருத்துவ படிப்பில் சாதனை
அரசுப் பள்ளிகளின் தரம் உயர்வு
அரசுப் பள்ளிகளின் வளர்ச்சி குறித்துப் பேசிய முதலமைச்சர், "தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு மற்றும் கல்வித் தரம் உயர்ந்து வருகிறது.
மாணவர்களின் ஆரோக்கியத்திற்காகச் சத்துணவு மற்றும் மாலை நேரச் சிறுதானியச் சிற்றுண்டி வழங்கப்படுகிறது.
அரசின் திட்டங்களால், நடப்பாண்டில் புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் பயின்ற 30 மாணவர்கள் மருத்துவப் படிப்பில் (MBBS) சேர்ந்துள்ளனர்" என்றார்.
முன்னதாக, ஜவஹர்லால் நேருவின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் கல்வி அமைச்சர் நமச்சிவாயம், எம்பி செல்வகணபதி, எம்எல்ஏ-க்கள் சாய் ஜெ. சரவணன்குமார், அசோக் ஆனந்த், பள்ளிக் கல்வி இயக்குநர் மோகன்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.