
அமளிக்கு மத்தியில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா லோக்சபாவில் தாக்கல்
செய்தி முன்னோட்டம்
பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் குறித்து எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளியிடும் நிலையில், லோக்சபா அமளிக்குள் மத்திய அரசு முக்கியமான ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை இன்று தாக்கல் செய்தது. பார்லிமென்டின் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21ஆம் தேதி தொடங்கியிருந்த நிலையில், அதன் ஆரம்பத்திலிருந்தே எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ச்சியாக அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை 11 மணிக்கு அவை கூடியதும், எதிர்க்கட்சிகள் மேசையை சுற்றி வந்தும், பதாகைகள் காட்டியும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவை 12 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் பிற்பகல் 12 மணிக்கு மீண்டும் அவை கூட்டப்பட்டபோது, மத்திய அரசு "ஆன்லைன் கேமிங்கை ஊக்குவித்தல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் மசோதா, 2025" எனப்படும் மசோதாவை தாக்கல் செய்தது.
முக்கிய அம்சங்கள்
மசோதாவின் முக்கிய அம்சங்கள்
ஆன்லைன் கேமிங் மற்றும் சூதாட்ட செயலிகள் மூலம் பயனர்கள், குறிப்பாக இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் பெரும் அளவில் பாதிக்கப்படுவதாக வந்த புகார்கள் அடிப்படையில் நடவடிக்கை. அதிக வருமானத்துக்காக, பணம் செலுத்தி விளையாடும் விளையாட்டுகள், பந்தயம், சூதாட்டம் போன்றவை தடைக்குரியவையாக வகைப்படுத்தப்படுகின்றன. பொது நலன், உள்நாட்டு சட்டம் மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இத்தகைய செயலிகளை ஒழுங்குபடுத்தும் சட்ட அடிப்படை அமைக்கப்படும். இந்தச் சட்டம் அமலுக்கு வந்தால், மத்திய அரசு தடை விதிக்கும் அதிகாரம் பெற்றதாகும், சூதாட்ட விளம்பரங்கள், பிரபலங்களின் ஒத்துழைப்புகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளதாலும், பரபரப்பான சட்ட விவாதங்களை ஏற்படுத்தும் வாய்ப்பு அதிகம். நாடாளுமன்றத்தில் எதிர்கால நாட்களில் இது தொடர்பான விவாதங்கள் மற்றும் வாக்கெடுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சட்டரீதியான விளைவுகள்
ஆன்லைன் பண விளையாட்டுகளை வழங்குவதற்கும், செயல்படுத்துவதற்கும் முன்மொழியப்பட்ட அபராதங்கள்
ஆன்லைன் பண விளையாட்டுகளை வழங்குவோ அல்லது செயல்படுத்துவோருக்கு கடுமையான தண்டனைகளை இந்த வரைவு சட்டம் முன்மொழிகிறது. குற்றவாளிக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, ₹1 கோடி வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். மீண்டும் மீண்டும் மீறினால் கடுமையான கட்டாய தண்டனைகள் விதிக்கப்படும். இந்த தளங்களை விளம்பரப்படுத்துவது முன்மொழியப்பட்ட சட்டத்தின் கீழ் ஒரு குற்றமாகும், இதற்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும்/அல்லது ₹50 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.