பணமோசடி வழக்கு குற்றப்பத்திரிக்கையில், பிரியங்கா காந்தியின் பெயரைச் சேர்த்துள்ள அமலாக்கத்துறை
ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் விவசாய நிலம் வாங்கியதை குறிப்பிட்டு, பணம் மோசடி வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிக்கையில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. டெல்லியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் முகவரான ஹெச்.எல்.பஹ்வா என்பவரிடம் இருந்து 2006ம் ஆண்டு பிரியங்கா நிலம் வாங்கியதாகவும், அதே நிலத்தை பிப்ரவரி 2010ல் அவருக்கு விற்பனை செய்ததாகவும் அமலாக்கத்துறை கூறியுள்ளது. இருப்பினும் இந்த வழக்கில் பிரியங்கா மீது குற்றம் சாட்டப்படவில்லை. பிரியங்காவின் கணவர் ராபர்ட் வர்தா 40.08 ஏக்கர் மதிப்பிலான மூன்று வெவ்வேறு நிலங்களை பஹ்வாவிடம், 2005-2006 காலகட்டத்தில் வாங்கி, மீண்டும் 2010ம் ஆண்டு அவருக்கே விற்பனை செய்துள்ளார். இதே முகவரிடம் பிரியங்கா காந்தியும் நிலம் வாங்கி, மீண்டும் அவருக்கே விற்பனை செய்துள்ளதாக அமலாக்கத்துறை கூறுகிறது.
அமலாக்கத் துறை குற்றப்பத்திரிக்கையில் பிரியங்காவின் கணவர் பெயர்
கடந்த செவ்வாய்க்கிழமை அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிக்கையில், ராபர்ட் வத்ரா பெயர் இடம் பெற்றிருந்தது. இந்த வழக்கில் முக்கிய புள்ளியாக ஆயுத வியாபாரியும், லண்டனுக்கு தப்பியோடியவருமான சஞ்சய் பண்டாரி என்பவர் உள்ளார். பண்டாரி மோசடி செய்யப்பட்ட பணத்தின் மூலம் வாங்கிய வீட்டை, ராபர்ட் வத்ரா புதுப்பித்து அங்கு தங்கியதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டுகிறது. கடந்த 2016 ஆம் ஆண்டு பண்டாரி லண்டனுக்கு தப்பிய நிலையில், அமலாக்கத்துறையின் கோரிக்கையை ஏற்று, அவரை நாடு கடத்த பிரிட்டிஷ் அரசு இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஒப்புக்கொண்டது.
பண மோசடி வழக்கில் புதிய குற்றப்பத்திரிக்கை தாக்கல்
ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த என்ஆர்ஐ தொழிலதிபர் செருவத்தூர் சாக்குட்டி தம்பி(சிசி) மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த சுமித் சாதா ஆகியோருக்கு எதிராக, இந்த வழக்கில் புதிய குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. வத்ராவின் நெருங்கிய கூட்டாளியான தம்பி, கடந்த 2020 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். தற்போது இவர் ஜாமினில் உள்ளார். சஞ்சய் பண்டாரி கணக்கில் காட்டாத வெளிநாட்டு வருமானம் மற்றும் சொத்துக்களை வைத்திருந்ததாகவும், அதை தம்பி மற்றும் சுமித் பாதுகாத்தும், பயன்படுத்தியும் வந்ததாக அமலாக்கத்துறை கூறுகிறது. பண்டாரி லண்டனில் வைத்திருந்த வீட்டை புதுப்பித்து, அதில் சுமித்துடன் வத்ரா தங்கியிருந்தது அமலாக்கத்துறை விசாரணையில் கண்டறிந்தது. இவர்கள் இருவரும், ஃபரிதாபாத் பகுதியில் நிலங்களை வாங்கியதாகவும், ஒருவருக்கொருவர் நிதி பரிவர்த்தனைகளை மேற்கொண்டதாகவும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டுகிறது.