மும்பையில் 'கல்லி கிரிக்கெட்' விளையாடி, மண் குவளையில் டீயை ருசித்த இங்கிலாந்து இளவரசர் வில்லியம் & இளவரசி கேட் மிடில்டன்
செய்தி முன்னோட்டம்
6-வது 'எர்த்ஷாட் பரிசு' விழாவில் பங்கேற்பதற்காக மூன்று நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள இங்கிலாந்து இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் மிடில்டன், தங்களது முதல் நாள் பயணத்தை மும்பையின் எளிய மக்களின் வாழ்வியலோடு இணைந்து மிக உற்சாகமாகத் தொடங்கினர். மும்பையின் பிரபலமான வடபாவ், மண் குவளையில் வழங்கப்படும் 'கட்டிங் சாய்', மும்பை மெட்ரோ ரயில் பயணம் மற்றும் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருடன் 'கல்லி கிரிக்கெட்' என மும்பையின் தெருவோர கலாச்சாரத்தை அரச தம்பதியினர் முழுமையாக அனுபவித்தனர்.
கல்லி கிரிக்கெட்
சச்சின் டெண்டுல்கருடன் களைகட்டிய 'கல்லி கிரிக்கெட்'
மும்பை பல்லார்ட் எஸ்டேட்டில் உள்ள என். மொரார்ஜி சாலையில் பாரம்பரிய 'டோல்-தாஷா' மேளதாள வரவேற்புடன் அரச தம்பதியினரின் பயணம் தொடங்கியது.
அங்கு பள்ளி மாணவிகள் மற்றும் 'கல்லி கிரிக்கெட்' குழுவினருடன் இணைந்து சச்சின் டெண்டுல்கருடன் நட்பு ரீதியான கிரிக்கெட் போட்டியில் அவர்கள் பங்கேற்றனர்.
இளவரசர் வில்லியம், முதலில் பேட்டிங் செய்து 5-வது பந்தில் போல்டானார்.
பின்னர் பந்துவீசிய அவர், சச்சின் டெண்டுல்கர் தூக்கி அடித்த பந்தை கேட்ச் பிடிக்க வைத்து சச்சினின் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார்.
இளவரசி கேட் மிடில்டன், சுமார் இரண்டு ஓவர்கள் வரை பேட்டிங் செய்து 8-வது பந்தில் வில்லியம் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
மும்பை மெட்ரோ
ஆலமரத்தடியில் 'கட்டிங் சாய்' & மும்பை மெட்ரோ பயணம்
கிரிக்கெட் போட்டியை தொடர்ந்து, மும்பையின் அடையாளமான உணவு மற்றும் போக்குவரத்து அனுபவங்களையும் அரச தம்பதியினர் சுவைத்தனர்.
அருகிலிருந்த பெரிய ஆலமரத்தின் கீழ் அமைந்திருந்த தேநீர்க்கடையில், மண் குவளையில் வழங்கிய 'கட்டிங் சாய்' மற்றும் வடபாவை வில்லியம், கேட் மற்றும் சச்சின் ஆகியோர் ருசித்தனர்.
தேநீர் மிகவும் அருமையாக இருந்ததாக இளவரசி கேட் பாராட்டியதாகக் கடை உரிமையாளர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
பாதுகாப்பு காரணங்களுக்காக முக்கிய விருந்தினர்கள் யார் என்பது ரகசியமாக வைக்கப்பட்டிருந்த நிலையில், இங்கிலாந்து இளவரசரை நேரில் பார்த்ததும் பள்ளி மாணவிகள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.
தொடர்ந்து விதான் பவன் மெட்ரோ நிலையத்திலிருந்து மும்பையின் புதிய மெட்ரோ ரயிலில் சாதாரணப் பயணிகளைப் போல பயணித்து பொதுப் போக்குவரத்து கட்டமைப்பை பார்வையிட்டனர்.
பிரதமர் மோடியுடன் சந்திப்பு
10 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வருகை
கடந்த 2016 ஏப்ரல் மாதத்திற்கு பிறகு, இளவரசர் வில்லியம் மற்றும் கேட் மிடில்டன் இந்தியாவுக்கு மேற்கொள்ளும் இரண்டாவது அதிகாரப்பூர்வப் பயணம் இதுவாகும்.
மும்பையில் நடைபெறும் எர்த்ஷாட் பரிசு விழாவில் 5 பிரிவுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 15 சுற்றுச்சூழல் தீர்வுகளுக்கு விருது வழங்கிய பிறகு, இவர்கள் டெல்லி செல்கின்றனர்.
அங்கு வரும் நவம்பர் 18-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து பேசவுள்ளனர்.