ஆசிரியர்கள் தினம்: 75 ஆசிரியர்களுக்கு, தேசிய நல்லாசிரியர் விருதை வழங்கி கௌரவிக்கிறார் குடியரசு தலைவர்
ஆண்டுதோறும், ஆசிரியர்கள் தினத்தன்று, நாடு முழுவதும் உள்ள சிறந்த ஆசிரியர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு 'தேசிய நல்லாசிரியர் விருது' தந்து கௌரவிப்பார் இந்திய குடியரசு தலைவர். அந்த வழக்கத்தில், இந்த ஆண்டு, நாடு முழுவதிலும் இருந்து, 75 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு, இன்று (செப்டம்பர் 5), டெல்லியில் உள்ள விக்யான் பவனில் வைத்து, 'தேசிய நல்லாசிரியர் விருது' அளிக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 'நல்லாசிரியர் விருது'- ஒரு பாராட்டு பட்டயம், 50 000 ரூபாய் ரொக்க பரிசும், வெள்ளி பதக்கமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடம், 50 பள்ளி ஆசிரியர்கள், 13 உயர்கல்வி ஆசிரியர்கள் மற்றும் திறன்மேம்பாடு மற்றும் தொழில் முனைவு அமைச்சகத்திலிருந்து 12 ஆசிரியர்கள், இந்த விருதுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
விருது பட்டியலில் இடம்பெற்றிருக்கும் தமிழகத்தை சேர்ந்த ஆசிரியர்கள்
மதுரை அலங்காநல்லூர் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் பணிபுரிந்து வரும் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் என்ற ஆசிரியருக்கும், தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் அரசு பள்ளியில் பணிபுரிந்து வரும் மாலதி என்ற ஆசிரியைக்கும் இந்த வருடத்திற்கான தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட உள்ளது. பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவு துறை உடன் இணைந்து கல்வி அமைச்சகம், இந்த 75 ஆசிரியர்களை தேர்வு செய்துள்ளது. விருதுகள் பெறும் இந்த ஆசிரியர்கள் அனைவரும், ஜனாதிபதி திரௌபதி முர்மு கையால் விருதை பெற்ற பிறகு, பிரதமர் மோடியை சந்திக்கும் வாய்ப்பையும் பெறுவார்கள் எனக்கூறப்படுகிறது. இந்த ஆசிரியர் தினத்தன்று, நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்களுக்கு, நியூஸ்பைட்ஸ் சார்பாக எங்களது வாழ்த்துக்கள்!