ரயில்வே வேலைவாய்ப்பு ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவ் மீது வழக்குத் தொடர குடியரசுத் தலைவர் ஒப்புதல்
முன்னாள் மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் மீதான வேலை வாய்ப்பு ஊழல் வழக்கில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழக்குத் தொடர ஒப்புதல் வழங்கியுள்ளார். ஒப்புதல் கிடைத்ததைத் தொடர்ந்து, மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) இந்த அனுமதியின் நகலை தில்லி ரூஸ் அவென்யூ நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தது. இந்த வழக்கு, 2004 முதல் 2009 வரை லாலு பிரசாத் யாதவ் பதவிக் காலத்தில் ரயில்வேயில் செய்யப்பட்டதாகக் கூறப்படும் நியமனங்களைச் சுற்றி நடந்துள்ள மோசடி தொடர்பானது. இதில் அவரது குடும்பத்தினர் அல்லது நெருங்கியவர்களுக்கு நிலத்தை வழங்கி வேலை பெற்றது தொடர்பாக விசாரிக்கப்பட உள்ளது.
மனைவி மற்றும் மகள்கள் பெயரில் நிலம்
லாலு பிரசாத் யாதவின் மனைவி ராப்ரி தேவி மற்றும் அவரது இரு மகள்களான மிசா பார்தி மற்றும் ஹேமா யாதவ் ஆகியோரின் பெயரில் நிலம் மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. 2022 அக்டோபரில், லாலு பிரசாத் யாதவின் குடும்பத்தினர் உட்பட 16 பேரின் பெயரைக் கொண்ட முதற்கட்ட குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்தது. பின்னர், விசாரணைக்குப் பிறகு கடந்த ஜூன் மாதம், நிலம் தொடர்பான வழக்கில் லாலு பிரசாத் யாதவ் மற்றும் 77 பேர் மீது சிபிஐ இறுதி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அவர் 2004 முதல் 2009 வரை மத்திய ரயில்வே அமைச்சராக இருந்தபோது பல்வேறு ரயில்வே மண்டலங்களில் உள்ள குரூப் டி பதவிகளில் மாற்றுத் திறனாளிகளாக நியமிக்கப்பட்ட 38 வேட்பாளர்களும் இதில் அடங்குவர்.