பொங்கல் தொகுப்பு டோக்கன் விநியோகம் இன்று முதல் தொடக்கம்; 9 முதல் 13ஆம் தேதி வரை பொருட்கள் வழங்கப்படும்
செய்தி முன்னோட்டம்
தமிழக அரசு சார்பாக ஆண்டுதோறும் ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பு வழங்கப்படுவது வாடிக்கை.
அதன்படி இந்த ஆண்டும் பொங்கல் தொகுப்பு விநியோகம் விரைவில் தொடங்கும் என சில வாரங்களுக்கு முன்னரே தமிழக அரசு அறிவித்தது.
அதன் தொடர்ச்சியாக பொங்கல் தொகுப்பு டோக்கன்கள் இன்று முதல் வீடுவீடாக விநியோகம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்பாக, தொகுப்பில் வழங்கப்படும் பொருட்களின் தரத்தை உறுதி செய்யவும், கரும்பை தோகையுடன் வழங்க வேண்டும் என்றும் தமிழக உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
பொங்கல் தொகுப்பு
ஜனவரி 9-ஆம் தேதி முதல் பொங்கல் தொகுப்பு விநியோகம் துவக்கம்
பொங்கல் தொகுப்பாக 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு வழங்கப்பட உள்ளது.
ஜனவரி 9-ஆம் தேதி இருந்து தொகுப்புகளின் விநியோகம் தொடங்கப்படும்.
இது குறித்து நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய உணவுத்துறை அமைச்சர், பொங்கல் தொகுப்பில் வழங்கப்படும் பொருட்களின் தரத்தை உறுதி செய்ய அறிவுறுத்தினார்.
மேலும், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொருட்களை விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், புதிய குடும்ப அட்டைகள் தொடர்பான விண்ணப்பங்களை விரைந்து பரிசீலித்து, தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு விரைவில் அட்டைகள் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.