சிக்கிம் வெள்ளம்- டீஸ்டா நதியில் அடித்துச் செல்லப்பட்ட ஆயுதங்கள்
சிக்கிம் மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் மேக வெடிப்பால், டீஸ்டா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கில் பல ராணுவ வீரர்களும் அடித்துச் செல்லப்பட்டனர். தற்போது இந்த வெள்ளத்தில் வெடிபொருட்கள் மற்றும் ராணுவ தளவாடங்களும் அடித்துச் செல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அடித்துச் செல்லப்பட்ட வெடிபொருட்கள் வெடித்து சிதறுவதற்கான சாத்திய கூறுகள் இருப்பதால், மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இருகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள மேற்குவங்க மாநிலத்தின் ஜல்பைகுரி மாவட்ட காவல்துறை கூறியிருப்பது: "நாங்கள் பொதுமக்களை விழிப்புடன் இருக்க கேட்டுக்கொள்கிறோம். பொதுமக்களுக்கு அறிமுகம் இல்லாத பெட்டிகள், வெடிபொருட்கள் மற்றும் சந்தேகப்படும்படியான பொருட்கள் ஏதேனும் ஆற்றில் தென்பட்டால், காவல்துறைக்கு உடனடியாக தகவல் கொடுக்க வேண்டும்" என அறிவுறுத்தி உள்ளனர்.
பலி எண்ணிக்கை 18 ஆக உயர்ந்தது
சிக்கிம் மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர். 22 ராணுவ வீரர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் மாயமானார்கள். மாயமானவர்களை தேடும் பணியில் ராணுவம் மற்றும் என்டிஆர்எப் படையினர் ஈடுபட்டுள்ளனர். கடந்த புதன் கிழமை அன்று வடக்கு சிக்கிம் மாநிலத்தின் லோனாக் ஏரியில் மேக வெடிப்பால் பெய்த கனமழை டீஸ்டா நதியில் திடீர் வெள்ளத்தை உண்டாக்கியது. டீஸ்டா நதி சிக்கிம் மாநிலத்தில் உருவாகி, மேற்கு வங்கம் வழியாக வங்கதேசத்திற்குள் நுழைகிறது. இந்த நதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளம், மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி, கூச் பெஹார் மாவட்டங்களையும் பாதித்தது குறிப்பிடத்தக்கது.