சிக்கிம் திடீர் வெள்ளபெருக்கு: 14 பேர் மரணம், 102 பேர் மாயம்
சிக்கிமின் லாச்சென் பள்ளத்தாக்கில் உள்ள டீஸ்டா ஆற்றில் இரு தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் 23 ராணுவ வீரர்கள் காணாமல் போயுள்ளதாக நேற்று கூறப்பட்டது. இவர்களோடு, பலர் சுற்றுலா பயணிகளும் மாயமானதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில், இந்த திடீர் வெள்ளத்தால், 14 பேர் இறந்துள்ளதாகவும், 102 பேர் மாயமானதாகவும் கூறப்பட்டுள்ளது. இரு தினங்களுக்கு முன்னர், வடக்கு சிக்கிமில் உள்ள லோனாக் ஏரியில் திடீரென அதிகமாக மழை பெய்ததால், டீஸ்டா நதியின் நீர் மட்டம் திடீரென உயர்ந்தது. அதோடு, சுங்தாங் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால், நிலைமை மேலும் மோசமாகி, அந்த ஆற்றின் நீர்மட்டம் 15-20 அடி உயரம் வரை உயர்ந்தது.
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட எஃகு பாலம்
இந்த திடீர் வெள்ளத்தால், 14 பாலங்கள் இடிந்து விழுந்ததால், ஐந்து மாநில அரசுக்கு சொந்தமான, ஒன்பது எல்லை சாலைகள் பெரும் சேதத்தை சந்தித்துள்ளது என்று சிக்கிம் தலைமைச் செயலாளர் கூறினார். "மாநில தலைநகர் காங்டாக்கிலிருந்து 30 கிமீ தொலைவில் உள்ள,சிங்டாமில் அமைந்துள்ள இந்திரேனி எஃகு பாலம் புதன்கிழமை அதிகாலை, டீஸ்டா நதி நீரில் முற்றிலும் அடித்துச் செல்லப்பட்டது" என்று அரசாங்க அதிகாரி கூறினார். மங்கன் மாவட்டத்தில் உள்ள சுங்தாங், காங்டாக் மாவட்டத்தில் உள்ள டிக்சு, சிங்டம், பாக்யோங் மாவட்டத்தில் உள்ள ராங்போ ஆகிய இடங்களில் இருந்து ஏராளமானோர் காணாமல் போயுள்ளனர் மற்றும் காயமடைந்துள்ளனர் என்று அவர் மேலும் கூறினார். இதுவரையில், ஒரு ராணுவ வீரர் உட்பட 166 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.