சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு முதல்முறையாக ஸ்ரீநகர் செல்லும் பிரதமர் மோடி
சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு, முதல்முறையாக ஸ்ரீநகருக்கு இன்று பயணமாகிறார் பிரதமர் மோடி. அங்கு நடைபெறவுள்ள பேரணியில் உரையாற்றி, ரூ.6,400 கோடி மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களை அவர் வெளியிட உள்ளார். ஸ்ரீநகரில் உள்ள மைதானத்தில் நடைபெறும் 'விக்சித் பாரத் விக்சித் ஜம்மு காஷ்மீர்' நிகழ்ச்சியிலும் பிரதமர் கலந்து கொள்கிறார். நாடு முழுவதும் உள்ள பலவிதமான யாத்திரை மற்றும் சுற்றுலா தலங்களை மேம்படுத்தும் 43 திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். பிஜேபி தலைமையிலான மத்திய அரசு ஆகஸ்ட் 5, 2019 அன்று 370வது பிரிவின் விதிகளை ரத்து செய்து, முந்தைய மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது. அதன் பின்னர் மோடி, அங்கே சென்றதே இல்லை.
ஸ்ரீநகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
பிரதமரின் வருகையை ஒட்டி, ஸ்ரீநகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரதமரின் பேரணி நடைபெறும் பக்ஷி ஸ்டேடியம் மூவர்ணக் கொடியால் அலங்கரிக்கப்பட்டுள்ளதாக PTI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் குறித்த அறிவிப்பை எதிர்க் கட்சிகள் எதிர்பார்க்கும் நிலையில், பிரதமரின் திட்டமிடப்பட்ட பயணம், இந்த விவகாரத்தில் அவர் என்ன சொல்ல போகிறார் என்ற பலத்த எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. ஸ்ரீநகரில், பிரதமர் செல்லும் வழியில் உள்ள பல பள்ளிகளை, புதன் மற்றும் வியாழன் ஆகிய இரு தினங்களும் மூட உத்தரவிடப்பட்டது. அதே நேரத்தில் வியாழக்கிழமை நடைபெறவிருந்த வாரியத் தேர்வுகள் அடுத்த மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டன.