தேர்தல் முடிவுகளுக்கு முன்னதாக தமிழகம் வரும் பிரதமர்; விவேகானந்தர் பாறையில் 3 நாட்கள் தியானம்
பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வரவுள்ளார். முன்னர் தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த பிரதமர், தற்போது கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறையில் மூன்று நாட்கள் தியானத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 6 கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், இறுதி கட்ட வாக்குப்பதிவு வருகிற ஜூன் 1ஆம் தேதி நடைபெற உள்ளது. அதனைத்தொடர்ந்து, வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி வெளியாக உள்ளன. தேர்தலில் பாஜக பெரும்பான்மை பெற்று ஆட்சியை மீண்டும் கைப்பற்றும் முனைப்பில் இருக்கிறது. இந்த நிலையில், பிரதமர் மோடி வரும் 30ஆம் தேதி கன்னியாகுமரி வரவுள்ளார். டெல்லியில் இருந்து விமானத்தில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் வரும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரிக்கு வருகிறார்.
கன்னியாகுமரியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது
தனிப்படகு மூலம் கடலின் நடுவே இருக்கும் விவேகானந்தர் பாறைக்கு செல்லும் பிரதமர் மோடி, மே 30ஆம் தேதி மாலை தொடங்கி, ஜூன் 1ஆம் தேதி வரை தொடர்ந்து 3 நாட்களுக்கு அங்கேயே தங்கி இருந்து, அங்குள்ள தியான மண்டபத்தில் தியானம் செய்யவுள்ளார். கன்னியாகுமரிக்கு பிரதமர் வருவதை ஒட்டி, அங்கே பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. பிரதமர் மோடி, ஒவ்வொரு தேர்தலின் போதும் ஆன்மீக பயணம் மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு தேர்தல் முடிவுகளுக்கு முன்னதாக விவேகானந்தர் பாறையில் தியானத்தில் ஈடுபட வருகிறார்.