'ராகுல் காந்தி போல் நடந்து கொள்ளாதீர்கள்': எம்பிக்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை
பிரதமர் நரேந்திர மோடி இன்று தேசிய ஜனநாயகக் கூட்டணியின்(என்டிஏ) நாடாளுமன்றக் கட்சிக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். அவர் மூன்றாவது முறையாக பதவியேற்ற பிறகு நாடாளுமன்றத்தில் நடக்கும் முதல் கூட்டத்தொடரின் போது ஆளும் எம்.பி.க்களிடம் அவர் ஆற்றும் முதல் உரை இதுவாகும். நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மக்களவை மற்றும் மாநிலங்களவையில் விவாதங்கள் நடந்து வரும் நிலையில், இந்த என்டிஏ கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இன்று இரு அவைகளிலும் நடைபெறும் விவாதங்களுக்கு பிரதமர் மோடி பதில் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்றைய அமர்வில் நடந்த களேபரம்
கடந்த காலங்களில் பிரதமர் சில சமயங்களில் என்டிஏ எம்.பி.க்களிடம் உரையாற்றியிருந்தாலும், அவர் பொதுவாக பாஜக எம்பிக்களின் கூட்டங்களில் மட்டுமே பேசுவார். இந்த முறை பாஜக பெரும்பாண்மை இல்லாமல், கூட்டணி கட்சிகளின் உதவியோடு ஆட்சி அமைந்திருப்பதால் இது போன்ற கூட்டங்களிலும் பிரதமர் மோடி பேசுகிறார் என்று பேசப்படுகிறது. நேற்றைய அமர்வில் பிரதமர் மோடியை ராகுல் காந்தி கடுமையாக சாடினார். "இந்துக்கள் வன்முறையில் ஈடுபட மாட்டார்கள். நீங்கள் எந்த வகையிலும் இந்து அல்ல" என்று ராகுல் காந்தி நேற்று கூறியிருந்தார். இது மக்களவையில் பெரும் அமளியை ஏற்படுத்தியது. இந்நிலையில், இன்று நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, "ராகுல் காந்தியை போல் நீங்கள் நடந்து கொள்ளாதீர்கள்" என்று எம்பிக்களுக்கு அறிவுரை வழங்கியதாக கூறப்படுகிறது.