மக்களவையில் இன்று: குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நடைபெறும்
மக்களவை கூட்டத்தொடரில் இன்று பிரதமர் மோடி குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதில் அளிக்கவுள்ளார். முன்னதாக நேற்று (ஜூலை 1) மக்களவையில் தொடங்கிய காரசார விவாதம் இரவு வரை நீடித்தது. கிட்டத்தட்ட 16 மணி நேரம் நடைபெற்ற விவாதம் இன்றும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. விவாதங்களின் இறுதியில், எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதிலளிப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை குடியரசு தலைவர் கூட்டு கூட்டத்தொடரில் உரையாற்றிய பின்னர், எதிர் காட்சிகள் நீட் தேர்வுத் தாள் கசிவு தொடர்பாக விவாதிக்க வேண்டும் என கூறியதால், அவையில் கூச்சல் ஏற்பட்டு, அவை இரண்டு நாள் ஒத்தி வைக்கப்பட்டது.
ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி பதில்
முன்னதாக நேற்றும் நீட்-யுஜி தேர்வு முறைகேடு குறித்து விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரியிருந்தன. ஆனால், சபாநாயகர் அதை நிராகரித்ததை அடுத்து எதிர்க்கட்சித் தலைவர்கள் இன்று மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அதனால், இன்று நீட் குறித்த விவாதம் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின்னர், மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எழுப்பிய கேள்விகள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் மோடி இன்று தனது பதில் உரையில் பதிலளிப்பார். நேற்று பாஜக சார்பில் முதல் சபாநாயகராக முன்னாள் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், அவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் வாக்கெடுப்பு நடத்தினார்.
நேற்று காரசாரமாக நடைபெற்ற விவாதம்
நேற்று, எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி தனது முதல் உரையை மக்களவையில் ஆற்றிய போது "வன்முறை இந்துக்கள்" என்று அழைக்கப்படுபவர்களை குறிவைத்து பேசியதால் சூடான கருத்துப் பரிமாற்றங்களும் சலசலப்புகளும் இருந்தன. ராகுல் காந்தியின் கருத்துக்கு பிரதமர் நரேந்திர மோடியும் உடனடி பதில் பேசியதால் மக்களவையில் சலசலப்பு ஏற்பட்டது. "பெரிய மனிதர்கள் அனைவரும் அகிம்சை பற்றியும் பயத்தைப் பற்றியும் பேசியிருக்கிறார்கள்... ஆனால், தங்களை தாங்களே இந்து என்று சொல்லிக்கொள்பவர்கள் வன்முறை, வெறுப்பு, அசத்தியம் பற்றி மட்டுமே பேசுகிறார்கள். நீங்கள் எந்த வகையிலும் இந்து அல்ல" என்று ராகுல் காந்தி கூறினார். மேலும், ராகுல் காந்தி, சிவபெருமானின் படத்தை எடுத்து காட்டியதால் மக்களவையில் அமளி ஏற்பட்டது.